புலம்பெயர் மாணவர்களை வெளியேற்றும் முடிவுக்கு எதிர்ப்பு: அமெரிக்க அரசின் முடிவை எதிர்த்து 2 பல்கலைக் கழகங்கள் வழக்கு..!!!

தினகரன்  தினகரன்
புலம்பெயர் மாணவர்களை வெளியேற்றும் முடிவுக்கு எதிர்ப்பு: அமெரிக்க அரசின் முடிவை எதிர்த்து 2 பல்கலைக் கழகங்கள் வழக்கு..!!!

வாஷிங்டன்: அமெரிக்காவில் பயின்று வரும் பிறநாட்டு மாணவர்களை வெளியேற்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசின் முடிவை எதிர்த்து 2 பல்கலைக் கழகங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன. கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்காவில் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்கள் வகுப்புகளை தொடங்குவது குறித்து எதுவும் அறிவிக்கவில்லை. இந்த நிலையில், அனைத்து வகுப்புகளையும் ஆன்லைன் முறைக்கு மாற்ற உள்ளதாக அமெரிக்க பல்கலைக்கழகங்கள் தெரிவித்துள்ளன. பல்கலைக்கழங்களின் ஆன்-லைன் முறைக்கு செக் வைக்க எண்ணிய டிரம்ப் அரசு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டால் வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற வேண்டும் என அதிரடியாக அறிவித்தது. இந்நிலையில் அமெரிக்க பல்கலைக் கழகங்களில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் பாடப்பிரிவு முழுவதுமாக ஆன்லைன் கல்வி முறைக்கு மாறிவிட்டால் அவர்கள் அமெரிக்காவில் தங்கியிருக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அந்நாட்டின் குடியுறவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. அமெரிக்காவில் தங்கியுள்ள பிறநாட்டு மாணவர்களும் வெளியேற்றப்படுவார்கள் என்று குடியுரிமைத்துறை அதிகாரிகளும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் புலம்பெயர் மாணவர்களை வெளியேற்றும் அமெரிக்காவின் முடிவை எதிர்த்து ஹார்வர்டு, மோசாச்சூசெட்ஸ் பல்கலைக் கழகங்கள் பாஸ்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. மாணவர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் அமெரிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு மாணவர்களுக்கு உரிய கால அவகாசம் தராமல் அவசரகதியில் நடவடிக்கை எடுத்துள்ளதால் அமெரிக்க அரசின் முடிவிற்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பல்கலைக் கழகங்கள் தொடர்ந்துள்ள இந்த அவசர வழக்கை பாஸ்டன் நீதிமன்றம் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவிருக்கிறது.

மூலக்கதை