ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்

தினமலர்  தினமலர்
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்

நியூயார்க்; ஐ.நா.,வின், 75வது ஆண்டு விழாவுக்காக இறுதி செய்யப்பட்டுள்ள தீர்மானத்தின் வரைவு அறிக்கை, இந்தியாவின் இலக்குகள் மற்றும் முன்னுரிமைகளை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.ஐ.நா., எனப்படும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக இந்தியா, கடந்த மாதம் தேர்வாகியுள்ளது. இதன்படி, வரும், 2021ம் ஆண்டு, ஜனவரியில் இருந்து, இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியா உறுப்பினராக இருக்கும்.

இந்நிலையில், ஐ.நா.,வின், 75வது ஆண்டு விழா, செப்டம்பர், 21ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.அதில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் வரைவு அறிக்கை, தற்போது இறுதி வடிவம் பெற்றுள்ளது. உறுப்பு நாடுகள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டுள்ள இந்த வரைவு அறிக்கை, சர்வதேச பிரச்னைகள் குறித்து, இந்தியாவுக்கு உள்ள கவலைகள் மற்றும், அவற்றிற்கான தீர்வுகளை பிரதிபலிக்கும் வகையில், அமைந்துள்ளதாக, ஐ.நா., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


இதுகுறித்து, ஐ.நா.,விற்கான இந்தியாவின் நிரந்தர துாதர் டி.எஸ்.திருமூர்த்தி கூறியதாவது:ஐ.நா., சபையின், 75வது ஆண்டு விழாவிற்காக இறுதி செய்யப்பட்டுள்ள அறிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். 2021 முதல், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா கொண்டு வரவுள்ள முன்னுரிமைகள் அனைத்தும், இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை