பரிந்துரை! ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு...புதுச்சேரியில் கொரோனா வேகத்தை தடுக்க சுகாதாரத் துறை

தினமலர்  தினமலர்
பரிந்துரை! ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு...புதுச்சேரியில் கொரோனா வேகத்தை தடுக்க சுகாதாரத் துறை

புதுச்சேரி : ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்துமாறு முதல்வருக்கு பரிந்துரை செய்துள்ளதாக, சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:கிராமங்களுக்கு நேரடியாக சென்று ஆம்புலன்ஸ் மூலமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தினசரி 100ல் இருந்து 150 பேரிடம் உமிழ்நீர் மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது.நகரத்துக்கு வந்து கொரோனா பரிசோதனை எடுக்க வேண்டும் என்றால் அரை நாளாகி விடுகிறது என கிராமங்களை சேர்ந்தவர்கள் வருவதில்லை. தற்போது, அறிகுறி இருக்கிறதோ, இல்லையோ அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று உமிழ்நீர் மாதிரி சேகரிக்கப்படுகிறது.

விடுபட்ட தொகுதிகளுக்காக கூடுதலாக ஒரு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு வாரத்தில் ஒரு நாள் வீட்டைவிட்டு யாரும் வெளியே வராமல் இருந்தால் நல்லது.ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்துமாறு முதல்வருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து முடிவு செய்து ஓரிரு நாட்களில் முதல்வர் அறிவிப்பார்.ஞாயிற்றுக் கிழமைகளில் ஆயிரக்கணக்கில் திரண்டு சாலைக்கு வந்து விடுகின்றனர்.

மார்க்கெட்டில் குவிந்து விடுகின்றனர். இதுபோல, பொதுமக்கள் வரக் கூடாது.கொரோனா பரவலின் வேகம் தொடர்ந்தால், இந்த மாத கடைசிக்குள் அரசு மருத்துவமனையில் படுக்கை இல்லாத நிலை ஏற்படலாம். எனவே, அதிக அறிகுறி இல்லாத, ஆரோக்கியமான கொரோனா நோயாளிகள் தலா 25 பேர் வீதம், 6 தனியார் மருத்துவக் கல்லுாரிகளுக்கு அனுப்பப்பட உள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை