ரூ.6 கோடி! நெல்லிக்குப்பத்தில் திட்ட பணிகள் நிலுவை...காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்

தினமலர்  தினமலர்
ரூ.6 கோடி! நெல்லிக்குப்பத்தில் திட்ட பணிகள் நிலுவை...காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சியில் பொறியாளர் உட்பட பல பணியிடங்கள் காலியாக உள்ளதால் ரூ.6 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகள் நிலுவையில் உள்ளன. காலி பணியிடங்களை விரைவாக நிரப்ப கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லிக்குப்பத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இப்பணிகளை ஆய்வு செய்ய வேண்டிய நகராட்சி கமிஷனர் பிரபாகரன், பண்ருட்டி நகராட்சி கமிஷனர் பதவியையும் கூடுதலாக பார்ப்பதால் இரு இடங்களிலும் பணிகள் பாதித்துள்ளன. குறிப்பாக நெல்லிக்குப்பம் நகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளில் தொய்வு நிலவுகிறது.நெல்லிக்குப்பம் நகராட்சியில் பொறியாளராக பணியாற்றிய சிவசங்கரன் நான்கு மாதத்துக்கு முன் பண்ருட்டிக்கு மாறுதல் செய்யப்பட்டார்.அவருக்கு பதிலாக சீர்காழியில் பணியாற்றிய வசந்தன் நியமிக்கப்பட்டார்.

நான்கு மாதங்களாகியும் அவர் சீர்காழியில் இருந்து மாறுதலாகி வந்து பொறுப்பேற்கவில்லை. பணி மாறுதலுக்கு உத்தரவிட்ட உயரதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.ரூ.6 கோடிக்கு டெண்டர்நெல்லிக்குப்பம் நகராட்சியில் ரூ.6 கோடிக்கு தார் சாலைகள், ரூ.50 லட்சத்தில் 6 ஆழ்துளை கிணறுகள் அமைக்க டெண்டர் விடப்பட்டு ஆறு மாதங்களாகிறது. நகராட்சியில் நடக்கும் சாலை உள்ளிட்ட பணிகள் தரமாக உள்ளனவா என பொறியாளர் தரச் சான்று வழங்கினால் மட்டுமே ஒப்பந்ததாரருக்கு பணம் வழங்க முடியும். ஆனால் பணியை செய்தாலும் பொறியாளர் இல்லாமல், பணம் கிடைக்காது.

இதனால் ஒப்பந்ததாரர்களும் பணியை துவக்காமல் நிறுத்தியுள்ளனர். மக்களுக்கு குடிநீர் வழங்க தேவையான ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியும் பாதித்துள்ளது.அதே போல், கட்டட ஆய்வாளர் பணியும் காலியாக உள்ளதால் புதியதாக வீடு கட்டுபவர்கள் கட்டட அனுமதி பெறுவதில் காலதாமதம் ஆகிறது. நகராட்சியில் இரண்டு துப்புரவு ஆய்வாளர்கள் இருக்க வேண்டும். அந்த பணியடங்களும் காலியாக உள்ளன. இதனால் நகரத்தில் நடக்கும் துப்புரவு பணிகளை ஆய்வு செய்ய முடியாததால் எங்கு பார்த்தாலும் குப்பை மேடாக காட்சியளிக்கிறது.

மேலும் கொரோனா தடுப்பு பணிகளையும் கண்காணிக்க போதுமான அதிகாரிகள் இல்லாததால் அந்த பணியும் தொய்வடைந்துள்ளது. மக்கள் நலன் கருதி உடனடியாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுப்பது நல்லது.

மூலக்கதை