மல்லையாவை திவாலானவராக அறிவிக்க மீண்டும் வலியுறுத்தல்

தினமலர்  தினமலர்
மல்லையாவை திவாலானவராக அறிவிக்க மீண்டும் வலியுறுத்தல்

லண்டன்: வங்கி கடன் மோசடி தொடர்பாக, தொழிலதிபர், விஜய் மல்லையாவை திவாலானவராக அறிவிக்க, வங்கிகள் குழு, லண்டன் உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.


'கிங்பிஷர் ஏர்லைன்ஸ்' நிறுவனர் விஜய் மல்லையா, ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல வங்கிகளில், 9,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி, அதை திருப்பி செலுத்தாமல் தப்பியோடி விட்டார்.இப்போது, ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் தலைநகர் லண்டனில் வசித்து வருகிறார். அவரிடம் இருந்து, கடனை வசூலிப்பதற்காக, மல்லையாவை திவாலானவராக அறிவிக்க வேண்டும் என, இந்தியன் ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகள் குழு, லண்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.

இந்த வழக்கை, கடந்த ஏப்ரல் மாதம் விசாரித்த நீதிபதி, மைக்கேல் பிரிக்ஸ்,'மல்லையா, இந்திய உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு மற்றும் கடனை திருப்பி செலுத்துவதற்கான திட்டம் குறித்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்துள்ளார்.'இந்த வழக்குகளில் உத்தரவு வரும் வரை , கடனை திருப்பி செலுத்துவதற்கு அவகாசம் வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கு, லண்டன் உயர் நீதிமன்றத்தில், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வங்கிகள் சார்பில், திருத்தப்பட்ட மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில், 'கடனை திருப்பி செலுத்துவதாக, மல்லையா அறிவித்துள்ளதை, தண்ணீரில் எழுதி வைத்த கதையாகவே கருத வேண்டும். அதனால், அவரை திவாலானவர் என, உடன் அறிவிக்க வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது.

மூலக்கதை