ஐநாவிற்கு கடிதம் எழுதியது அமெரிக்கா உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுகிறோம்

தினகரன்  தினகரன்
ஐநாவிற்கு கடிதம் எழுதியது அமெரிக்கா உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுகிறோம்

வாஷிங்டன்: உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறும் தனது முடிவு குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அமெரிக்கா முறைப்படி கடிதம் எழுதியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவின் வுகானில் இருந்து கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியது. ஆனால், இது பற்றி மற்ற நாடுகளை உலக சுகாதார அமைப்பு எச்சரிக்காமல், சீனாவின் கைப்பாவையாக செயல்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்தார். உலக சுகாதார அமைப்பு உலகை தவறாக வழிநடத்தியதன் காரணமாக உலகம் முழுவதும் பல லட்சம் மக்கள் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் பிற்பகுதியில் உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதியுதவி நிறுத்தப்பட்டது. கடந்த மே மாதம் உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறவுள்ளதாகவும் அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையில் இதுகுறித்து அமெரிக்கா ஐக்கிய நாடுகள் சபைக்கு தனது முடிவை முறைப்படி தெரிவித்துள்ளது. கடந்த 6ம் தேதி உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுவது குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அமெரிக்கா கடிதம் எழுதியுள்ளது. இது குறித்து ஐநா பொது செயலாளரின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டிஜாரிக் கூறுகையில், “ உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகியதை அமெரிக்க 6ம் தேதி தெரிவித்தது. எனினும் 2021ம் ஆண்டு ஜூலை 6ம் தேதி தான் வெளியேற்ற நடைமுறை அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும்” என குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை