பிசிசிஐ தலைவர் கங்குலி 48வது பிறந்தநாள் கொண்டாட்டம்: முகக்கவசம் விநியோகித்த ரசிகர்கள்

தினகரன்  தினகரன்
பிசிசிஐ தலைவர் கங்குலி 48வது பிறந்தநாள் கொண்டாட்டம்: முகக்கவசம் விநியோகித்த ரசிகர்கள்

கொல்கத்தா: பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்கள் அவரது படங்கள் அச்சிடப்பட்ட முகக் கவசங்களை விநியோகம் செய்தனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவருமான சவுரவ் கங்கலி நேற்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளின் போது கொல்கத்தாவில் உள்ள ரசிகர்கள் வழக்கமாக  கேட் வெட்டுவது, இனிப்பு வழங்குவது என்று அமர்க்களப்படுத்துவார்கள். ஆனால் கொரோனா பீதி காரணமாக இந்த ஆண்டு கேக் வெட்ட வாய்ப்பில்லை. அதனால் கவலைப்படாத ரசிகர்கள் சூழலுக்கு ஏற்ப பிறந்தநாள் கொண்டாடத்தை வேறு ‘பாணிக்கு’ மாற்றியுள்ளனர்.கொரோனா பரவலை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ‘முகக் கவசங்களை’ தயாரித்து கடந்து 2 நாட்களாக கொல்கத்தா முழுவதும் விநியோகம் செய்து வருகின்றனர். அந்த முகக் கவசத்தில் கங்குலியின் 2 படங்கள்  அச்சிடப்ட்டுள்ளன. ஒருபக்கம்1996ம் ஆண்டு லார்ட்ஸ் அரங்கில் அறிமுகமான கங்குலியின் படமும், இன்னொரு பக்கம் பிசிசிஐ தலைவராக இருக்கும் படமும் உள்ளன. கங்குலி ரசிகர்கள் சுமார் 9000 பேர் உறுப்பினர்களாக இருக்கும் ‘மகாராஜர்’ என்ற குழுவும் முகக் கவசங்களை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதன் நிர்வாகிகளில் ஒருவரான மனஸ் சட்டர்ஜி தர்பரே, ‘நாங்கள் தயாரித்துள்ள முகக் கவசங்களை முதலில் எங்கள் உறுப்பினர்களுக்கு வழங்குகிறோம். பிறகு மக்களுக்கும் விநியோகித்து வருகிறோம். வழக்கமாக தாதா (கங்குலி) வீட்டுக்கு போய் அவரை பார்ப்போம். இந்த முறையும் பாதுகாப்பு அதிகரிகளிடம் அனுமதி பெற்றுள்ளோம். அவரிடமும் முகக் கவசங்கைள வழங்குகிறோம்’ என்றார்.இன்னும் சில ரசிகர்கள் குழு கங்குலி படங்கள் போட்ட முகக் கவசங்களை ரூ.96க்கு  விற்பனை செய்கிறார்கள். அதன் மூலம் கிடைக்கும் பணத்தை சமூக நலப் பணிகளுக்கு செலவிட முடிவு செய்துள்ளார்களாம். இவை தவிர சமீபத்திய புயல் மழையால் பாதிக்கப்பட்ட  குடும்பங்களுக்கு உதவிட கங்குலி ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். இது கங்குலிக்கு 48வது பிறந்தநாள் என்பதால் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 48 குடும்பங்களை தேர்வு செய்துள்ளனர். கங்குலியும் உதவினார்: கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், மேற்கு வங்க மாநிலத்தில் வேலையின்றி தவிக்கும் குடும்பங்களுக்கு உதவிட முடிவு செய்தார் சவுரவ் கங்குலி. அதற்காக தொண்டு நிறுவனங்கள் மூலம் ரூ.50 லட்சம் மதிப்பில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரிசி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை