ஏழுமலையான் கோயில் அருகே சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் அச்சம்

தினகரன்  தினகரன்
ஏழுமலையான் கோயில் அருகே சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் அச்சம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு கொரோனா பரவாமல் இருக்க கடந்த மார்ச் 20ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், 80 நாட்களாக பக்தர்கள் நடமாட்டமில்லாமல் திருமலை முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால், வன பகுதியிலிருந்த சிறுத்தை புலி, கரடி, பாம்பு,  டமான், முள்ளம்பன்றி போன்ற வனவிலங்குகள் தொடர்ந்து திருமலையில் பல்வேறு பகுதிகளில் சுற்றி வந்தது. ஏழுமலையான் கோயிலில் கடந்த ஜூன் 8ம் தேதி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். திருமலை பாலாஜி நகர் வனப்பகுதியிலிருந்து சிறுத்தை ஒன்று வெளியே வந்து நேற்று முன்தினம் சாலையில் சுற்றியது. இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. இதைக்கண்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். வனத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் வன விலங்குகள் வராதபடி உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூலக்கதை