தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்வு சவரன் ரூ.37,536க்கு விற்பனை: ஒரே நாளில் ரூ.528 அதிகரிப்பு; நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி

தினகரன்  தினகரன்
தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்வு சவரன் ரூ.37,536க்கு விற்பனை: ஒரே நாளில் ரூ.528 அதிகரிப்பு; நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி

சென்னை: தங்கம் வரலாற்றில் முதல் முறையாக நேற்று சவரன் ரூ.37,536க்கு விற்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் மட்டும் சவரன் ரூ.528 அதிகரித்தது. இந்க வாரத்தில் 38 ஆயிரத்தை கடக்க அதிக வாய்ப்பு உள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். கொரோனா ஊரடங்கு நேரத்தில் தங்கம் விலை சில நேரத்தில் அதிரடியாக உயர்ந்து மறுநாள் அதே அளவில் குறைவதுமான போக்கும் காணப்பட்டது. கடந்த 1ம்தேதி ஒரு கிராம்  ரூ.4,684க்கும், சவரன் ரூ.37,472க்கும் விற்பனையானது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலையாகும். இதற்கு முன்னர் இருந்த அதிகப்பட்ச விலை அனைத்தையும் இந்த விலை முறியடித்தது.இந்த நிலையில் நேற்று தங்கம் விலையில் அதிரடி மாற்றம் காணப்பட்டது. அதாவது கிராமுக்கு ரூ.66 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,692க்கும், சவரனுக்கு ரூ.528 அதிகரித்து சவரன் ரூ.37,536க்கும் விற்கப்பட்டது. இந்த விலை தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலையாகும். இதற்கு முன்னர் இருந்த அனைத்து விலையையும் நேற்றைய விலை முறியடித்தது. தங்கம் விலை ஒரே நாளில் சவரன் ரூ.528 அளவுக்கு உயர்ந்திருப்பது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே நேரத்தில் தங்கம் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். இது குறித்து சென்னை தங்கம், வைரம் நகை வியாபாரிகள் சங்கம் தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது: தற்போதைய காலக்கட்டத்தில் முதலீட்டுக்கு தங்கத்தை தவிர வேறு மாற்று பொருள் வேறு இல்லை என்ற நிலை முதலீட்டாளர்கள் நினைக்க தொடங்கியுள்ளனர். இதுவே விலை உயர்வுக்கு காரணம். இந்த வாரமே சவரன் ரூ.38000 கடக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை