மாஸ்க் அணியாத பிரேசில் அதிபருக்கு கொரோனா

தினகரன்  தினகரன்
மாஸ்க் அணியாத பிரேசில் அதிபருக்கு கொரோனா

சாபோலோ: மாஸ்க் அணியாமல் பொது இடங்களில் சுற்றித்திரிந்ததால் நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளான பிரேசில் அதிபர் ஜேர் போல்சனாரோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் பிரேசில் உள்ளது. அந்நாட்டில் சுமார் 16 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அந்நாட்டின் அதிபர் போல்சனாரோ மாஸ்க் தேவையில்லை, சமூக இடைவெளி தேவையில்லை, சுதந்திரமாக நடமாடுங்கள் என பிரசாரம் செய்தார். கொரோனா பாதிப்பு தொடங்கியதில் இருந்தே போல்சனாரோ பல்வேறு நிகழ்ச்சிகளில் மாஸ்க் அணியாமலே பங்கேற்றார். இதனால் அந்நாட்டு நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளானார். இனியும் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் நீதிமன்றம் அவரை எச்சரித்தது. அதன்பிறகு அவர் மாஸ்க் அணிந்தாலும் அதை முறையாக அணியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதால், போல்சனாரோ கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதன் முடிவு நேற்று கிடைத்தது. இதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை போல்சனாரோ தனது பேட்டியின் போது செய்தியாளர்களிடம் நேரடியாக தெரிவித்தார். தற்போது அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.

மூலக்கதை