பாக்., ஹிந்து கோயில் வழக்கு: தீர்ப்பு ஒத்தி வைப்பு

தினமலர்  தினமலர்
பாக்., ஹிந்து கோயில் வழக்கு: தீர்ப்பு ஒத்தி வைப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், 10 கோடி ரூபாய் செலவில், ஹிந்து கோயில் கட்டப்படுவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. கோயில் கட்டுவது தொடர்பாக, இஸ்லாமிய கொள்கை கவுன்சிலின் ஆலோசனையை கேட்க, அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில், 10 கோடி ரூபாய் மதிப்பில், ஹிந்து கோயில் கட்டுமான பணிகளுக்கு, சமீபத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில், கோயில் கட்டுமானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டது.

நீதிபதி அமர் பரூக் முன்னிலையில், வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பாகிஸ்தான் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜா காலித் மெக்மூத் கான், 'சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்கள் பராமரிப்பு மற்றும் புனரமைப்பிற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து தான், இந்த கோயில் கட்டப்படுகிறது' என வாதிட்டார்.வழக்கை தொடர்ந்தவரின் வழக்கறிஞர் ஆஜராகாததால், நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார்.

இதற்கிடையே, மதவிவகாரங்களுக்கான அமைச்சர் நுார்உல் ஹக் கத்ரி கூறுகையில், 'கோயில் கட்டுமானம் தொடர்பாக, இஸ்லாமிய கொள்கை கவுன்சிலுக்கு, விரைவில் கடிதம் அனுப்பி வைக்கப்படும்.'மக்கள் பணத்தில் கோயில் கட்டப்பட வேண்டுமா, கூடாதா என்பதில் தான் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது' என்றார்.

மூலக்கதை