நாட்டை விட்டு வெளியேற்றம்: அமெரிக்கா உத்தரவால் இந்தியர்கள் அச்சம்

தினமலர்  தினமலர்
நாட்டை விட்டு வெளியேற்றம்: அமெரிக்கா உத்தரவால் இந்தியர்கள் அச்சம்

நியூயார்க் : 'முழுதும், 'ஆன்லைன்' மூலம் நடத்தப்படும் படிப்புகளை படிக்கும் மாணவர்கள், தங்களுடைய நாட்டுக்கு திரும்ப வேண்டும் அல்லது வெளியேற்றப்படுவர்' என, அமெரிக்கா புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், பல ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

'கொரோனா' பரவல் மற்றும் அதைத் தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், வெளிநாட்டவருக்கு விசா வழங்குவதில், அமெரிக்கா பல மாற்றங்களை செய்துள்ளது. இந்தாண்டு இறுதி வரை, வேலைக்காக வருவோருக்கான குறிப்பிட்ட சில விசாக்கள் நிறுத்தப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அமெரிக்க குடியுரிமை மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு, புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

அபாயம்


அதில் கூறப்பட்டுள்ளதாவது : ஊரடங்கைத் தொடர்ந்து, பல்வேறு அமெரிக்க பல்கலைகள் மற்றும் கல்லுாரி கள், 'ஆன்லைன்' வகுப்புகளுக்கு மாறியுள்ளன. இவ்வாறு முழுதும் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்படும் பல்கலை மற்றும் கல்லுாரியில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், உடனடியாக சொந்த நாட்டுக்கு திரும்ப வேண்டும். அவ்வாறு இல்லாதபட்சத்தில், அவர்களை வெளியேற்றும் சூழ்நிலை ஏற்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் படிப்பதற்காக, எப் - 1 மற்றும் எம் - 1 விசாக்கள் வழங்கப்படுகின்றன. கடந்த, 2017 மற்றும், 2018ல், இந்த விசாவை, சீனா மற்றும் இந்தியா அதிக அளவில் பெற்று உள்ளன. சீனாவைச் சேர்ந்த, நான்கு லட்சத்து, 78 ஆயிரத்து, 732 பேருக்கு மாணவர் விசா வழங்கப்பட்டது. அதற்கடுத்து, இந்தியாவைச் சேர்ந்த, இரண்டு லட்சத்து, 51 ஆயிரத்து, 290 பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் இந்த உத்தரவால், வரும், செப்டம்பர் - டிசம்பர் வரையிலான, அடுத்த செமஸ்டரில் தேர்வு எழுத உள்ள மற்றும் புதிதாக கல்லுாரிகளில் சேர உள்ள இந்திய மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர், பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

கருத்து


இந்நிலையில், சில விலக்குகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் பாடத்துடன், நேரடி வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், ஆன்லைன் பாடத்தை நடத்தும் கல்லுாரிகளில் இருந்து, நேரடி வகுப்புகளை நடத்தும் கல்லுாரிகளுக்கு மாறி கொள்ளவும் மாணவர்களுக்கு வாய்ப்பு தரப்படுகிறது. அரசின் இந்த உத்தரவுக்கு, அமெரிக்க கல்வியாளர்கள், எம்.பி.,க்கள் என பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 'அரசின் உத்தரவு கொடூரமானதாக உள்ளது' என, அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை