'பானி பூரி ஏடிஎம்': 10ம் வகுப்பு மட்டுமே முடித்த இளைஞர் சாதனை

தினமலர்  தினமலர்
பானி பூரி ஏடிஎம்: 10ம் வகுப்பு மட்டுமே முடித்த இளைஞர் சாதனை

ஆமதாபாத்: கொரோனா பரவல் பயமின்றி பானி பூரி சாப்பிட, 'பானி பூரி ஏடிஎம்' தயாரித்த இந்தியரின் படைப்பு சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் சாலையோரம் அதிகம் விற்கப்படும் பானிபூரியை அதிகம் விரும்பி சாப்பிடும் பலரும், யூடியூப் பார்த்து வீட்டில் தயாரித்து உண்ண ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில், கொரோனா பயமின்றி பானிபூரி சாப்பிட, இந்தியர் ஒருவர் மிஷின் ஒன்றை தயாரித்துள்ளார். குஜராத் மாநிலம் ஆமதாபாத்தை சேர்ந்த இளைஞரான பாரத்பாய் விகாபாய் பிரஜாபதி, இந்த 'பானி பூரி ஏடிஎம்'மை தயாரித்துள்ளார்.


இந்த மிஷினில், ரூ.20 நோட்டை உள்ளே செலுத்தினால், கன்வேயர் பெல்டில், பூரியுடன் பானி, உருளைக்கிழங்கு சேர்த்த கலவை, ஒன்றன் பின் ஒன்றாக வருகிறது. இதனை அப்படியே எடுத்து சாப்பிடலாம். கொரோனா பரவலைத் தடுக்கவும், மக்கள் பயமின்றி பானி பூரி சாப்பிடவும் இந்த மிஷினை, பிரஜாபதி கண்டுபிடித்துள்ளார்.

10ம் வகுப்பு மட்டுமே படித்த பிரஜாபதியின் இந்த கண்டுபிடிப்பும், அவரது மிஷின் எவ்வாறு செயல்படுகிறது என்ற வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மூலக்கதை