கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

தினகரன்  தினகரன்
கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இங்கிலாந்து  வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

சவுத்தாம்ப்டன்: இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, சவுத்தாம்ப்டன் ரோஸ் பவுல் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30க்கு தொடங்குகிறது.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. சில தொடர்கள் ரத்தாகின. சுமார் 115 நாட்களாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை. இந்நிலையில், முதல்நாடாக இங்கிலாந்து கிரிக்கெட் போட்டிகளை நடத்த முன்வந்தது. அதன் தொடர்ச்சியாக இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளிடையே 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை நடத்த முடிவு செய்தது.அதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பு விமானத்தில் ஜூன் முதல் வாரத்தில் இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் போய்ச் சேர்ந்தது. அங்கு தனிமைப்படுத்துதல், கொரோனா சோதனைக்கு பிறகு வெ.இண்டீஸ் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் முதல் டெஸ்ட் நடைபெற உள்ள சவுத்தாம்ப்டன் நகருக்கு ஜூலை 3ம் தேதி வெ.இண்டீஸ் அணி சென்றது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் முதல் டெஸ்ட் இன்று தொடங்குகிறது. இதில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியும், ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெ.இண்டீஸ் அணியும் விளையாடுகின்றன.கடந்த ஆண்டு இரு அணிகளும் மோதிய டெஸ்ட் தொடரை வெ.இண்டீஸ் 2-1 என்ற கணக்கில் கைபற்றியது. அதனால் இந்த தொடரை கைப்பற்றி பதிலடி கொடுக்க இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த 2 அணிகளும் கடைசியாக மோதிய 5 போட்டிகளில் 3ல் வெ.இண்டீசும், 2ல் இங்கிலாந்தும் வென்றுள்ளன.வெ.இண்டீஸ் அணியின்  முக்கிய வீரர்களான  டேரன் பிராவோ, ஹெட்மயர், கீமோ பால் ஆகியோர் கொரோனா பீதி காரணமாக இங்கிலாந்து செல்ல மறுத்து விட்டனர். கடந்த ஆண்டு இங்கிலாந்திடம் தொடரை வெல்ல காரணமாக இருந்தவர்கள், அங்கு செல்லாதது அணிக்கு இழப்புதான். அதேபோல் கடந்த முறை வெ.இண்டீசுக்கு எதிராக விளையாடிய இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர்களான ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், மொயீன் அலி ஆகியோர் அணியில் இடம் பெறாதது லேசான பின் அடைவுதான். ஆனால் சொந்த மண்ணில் போட்டி நடப்பது இங்கிலாந்துக்கு இந்த முறை சாதகமாக இருக்கலாம். எப்படி இருந்தாலும் பல மாதங்களுக்கு பிறகு கிரிக்கெட் மீண்டும் இன்று களம் திரும்புவதால் ரசிகர்கள் உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர். * இனவெறிக்கு எதிராக அமெரிக்காவில் இனவெறி காரணமாக ஜார்ஜ் புளாய்டு என்ற கறுப்பின நபர் போலீஸ்காரரால் கொல்லப்பட்டதற்கு உலகம் முழுவதும் விளையாட்டு வீரர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக வெ.இண்டீஸ் அணி வீரர்களும், இனவெறி எதிர்ப்பு வாசகம் அச்சிட்ட சீருடைகள் அணிந்து விளையாட உள்ளனர். * மருத்துவர்களுக்கு ஆதரவாகஇங்கிலாந்து வீரர்கள் அணியும் சீருடையில், அந்நாட்டில் கொரோனாவுக்கு எதிராக போராடிய மருத்துவர்கள், செவிலியர்கள், தன்னார்வலர்களின் பெயர்கள் பொறிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பயிற்சியின்போது இதுபோன்று பெயர்கள் பொறிக்கப்பட்ட சீருடைகள் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. * முதல்முறையாக கேப்டன் இங்கிலாந்து அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் (29), 2013ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். கேப்டனாக இருந்த ஜோ ரூட், தனது மனைவிக்கு 2வது பிரசவம் என்பதால் நடப்பு தொடரில் இருந்து  விலகியுள்ளார். அதனால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடருக்கு பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முதல் தர கிரிக்கெட் போட்டி ஒன்றுக்கு ஸ்டோக்ஸ் கேப்டனாக பொறுப்பேற்பது இதுவே முதல் முறையாகும்.* இதுவரைஇரு அணிகளும் 1963 முதல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றன. மொத்தம் 117 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளன. அதில்  வெ.இண்டீஸ் 47 போட்டிகளிலும், இங்கிலாந்து 34 போட்டிகளிலும் வென்றுள்ளன. மேலும் 36 போட்டிகள் டிராவில் முடிந்தன.இங்கிலாந்து: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோப்ரா ஆர்ச்சர், டொமினிக் பெஸ், ஸ்டூவர்ட் பிராடு, ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஸாக் கிராவ்லி, ஜோ டேன்லி, ஓலி போப், டொமினிக் சிப்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.வெஸ்ட் இண்டீஸ்: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), ஜெர்மைன் பிளாக்வுட், நிக்ருமா போனர், கிரெய்க் பிராத்வெய்ட், ஷமார் புரூக்ஸ், ஜான் கேம்பெல்,  ரோஸ்டன் சேஸ், ரகீம் கார்ன்வால்,ஷேன் டவ்ரிச் (விக்கெட் கீப்பர்), ஷனான் கேப்ரியல், கெமர் ஹோல்டர், ஷாய் ஹோப்,  அல்ஜாரி ஜோசப், ரேமன் ரீபர், கெமர் ரோச்.

மூலக்கதை