வெளியுறவுத்துறை அமைச்சக அறிக்கையில் கல்வான் பள்ளத்தாக்கு பற்றி ஏன் குறிப்பிடப்படவில்லை: மத்திய அரசுக்கு ராகுல் 3 கேள்வி

தினகரன்  தினகரன்
வெளியுறவுத்துறை அமைச்சக அறிக்கையில் கல்வான் பள்ளத்தாக்கு பற்றி ஏன் குறிப்பிடப்படவில்லை: மத்திய அரசுக்கு ராகுல் 3 கேள்வி

புதுடெல்லி: கிழக்கு லாடக்  எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15ம் தேதி சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். இதன் காரணமாக இருநாடுகளும் எல்லையில் படையை குவித்தன. இந்நிலையில், எல்லைப்பிரச்னை தொடர்பாக சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங் வீ, இந்தியா தரப்பில் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் பேச்சுவார்ததை நடத்தினார்கள். தொலைபேசி மூலமாக நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து இருநாட்டு படைகளும் எல்லையில் இருந்து விலகுவது என முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இருநாட்டு படைகளும் நேற்று முன்தினம் முதல் திரும்ப தொடங்கின. இது குறித்து சீன வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கல்வான் பள்ளத்தாக்கில் சமீபத்தில் நடந்தவற்றுள் சரியானதும் தவறானதும் மிக தெளிவாக உள்ளது. பிராந்திய ஒருமைப்பாட்டையும் எல்லைப்பகுதிகளில் அமைதியையும் சீனா தொடர்ந்து பாதுகாக்கும்,’’ என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்திய வெளியுறவு அமைச்சகம்  வெளியிட்ட அறிக்கையில், கல்வான் பள்ளத்தாக்கு என்ற வார்த்தை குறிப்பிடப்படவில்லை. இதனால், இரு நாட்டு அரசுகள் வெளியிட்ட அறிக்கையை வெளியிட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘தேசிய நலன் முக்கியமானது. அதனை பாதுகாப்பது தான் இந்திய அரசின் கடமையாகும். அவ்வாறு இருக்கையில் எல்லையில் ஏற்கனவே இருந்த நிலை தொடர வேண்டும் என அரசு வலியுறுத்தாதது ஏன்? நமது எல்லையில் ஆயுதமின்றி சென்ற 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதை சீனா நியாயப்படுத்துவதற்கு ஏன் அனுமதிக்கப்பட்டது?  மத்திய அரசின் அறிக்கையில் கல்வான் பள்ளத்தாக்கின் பிராந்திய இறையாண்மை பற்றி ஏன் குறிப்பிடப்படவில்லை?’ என கூறியுள்ளார்.

மூலக்கதை