இந்தியாவுடன் நட்பு வைப்பதை தடுக்க 13 அண்டை நாடுகளுக்கும் சீனா நெருக்கடி: குடைச்சலுக்கு மேல் குடைச்சல்; எல்லை பிரச்னையை கிளப்பி பூடானுக்கும் செக்

தினகரன்  தினகரன்
இந்தியாவுடன் நட்பு வைப்பதை தடுக்க 13 அண்டை நாடுகளுக்கும் சீனா நெருக்கடி: குடைச்சலுக்கு மேல் குடைச்சல்; எல்லை பிரச்னையை கிளப்பி பூடானுக்கும் செக்

புதுடெல்லி: இந்தியாவுடன் எந்த நெருக்கமும் கூடாது என்பதற்காக, தனது 13 அண்டை நாடுகளுக்கும் சீனா மறைமுக நெருக்கடி கொடுத்து வருகிறது. பூடானின் எல்லை பிரச்னை குறித்து சமீபத்தில் சீனா வெளியிட்ட அறிக்கையால் புதிய சர்ச்சை கிளம்பி உள்ளது. சீனாவை சுற்றிலும் 14 அண்டை நாடுகள் உள்ளன. அதில், இந்தியாவுக்கு மட்டுமின்றி மற்ற 13 நாடுகளுக்கும் கூட, பல்வேறு பிரச்னைகளை கிளப்பி சீனா குடைச்சல் கொடுத்து வருகிறது, அதில், சமீபத்தில் சிக்கி இருப்பது பூடான். இந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள சாக்தெங் வன உயிரிகள் சரணாலய பகுதியை தங்களுடையது என்று சீனா சமீபத்தில் உரிமை கோரியது.ஆனால், பூடான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இது நடந்து சில நாட்களுக்கு பின்னர், சீன வெளியுறவு அமைச்சகம் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ‘சீனா - பூடான் இடையேயான எல்லை நிர்ணயிக்கவில்லை. கிழக்கு, மத்திய, மற்றும் மேற்குப் பகுதிகளில் தொடர்ந்து நீண்ட நாட்களாக தகராறு இருந்து வருகிறது. கிழக்கு பகுதி அனைத்தும் எங்களுக்கே சொந்தம்’ என்று தெரிவித்துள்ளது. ஏற்கனவே, ஐ.நா உலகச் சுற்றுச்சூழல் வசதிக்கான வளர்ச்சித் திட்டத்தில், பூடானில் உள்ள சாக்தெங் சரணாலயத்துக்கு நிதி கொடுக்கக் கூடாது என்றும், அது தகராறுக்குரிய பகுதி என்றும் நிதியை நிறுத்த சீனா முயன்றது. ஆனால், அதையும் மீறி பூடானுக்கு ஐநா உலக சுற்றுச்சூழல்  அமைப்பு  நிதியுதவி அளித்தது. சீனா -பூடான்  இடையே 1984-2016ம் ஆண்டுகளில் நடந்த 24 சுற்று பேச்சுவார்த்தையில், கிழக்குப் பூடான் பகுதி பற்றி எழுத்துப்பூர்வமாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. அருணாச்சல பிரதேச எல்லையில் இருக்கும் இப்பகுதியில்தான் சாக்தெங் சரணாலயம் உள்ளது. 2017ம் ஆண்டு இந்திய - சீன படைகளுக்கு இடையே டோக்லாம் சிக்கல் எழுந்த பிறகு, பூடான் - சீனா இடையே பேச்சுவார்த்தை நடக்கவில்லை. 2018, ஜூலையில் சீன வெளியுறவு துணை அமைச்சர் காங் ஷுவான்யு பூடானுக்கு சென்றபோது பூடான் அரசர், பிரதமர் மற்றும் பிற அதிகாரிகளைச் சந்தித்தார். ஆனாலும், 25வது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இன்னமும் நடைபெறவில்லை.இந்திய - சீன எல்லை பிரச்னைக்கு மத்தியில் இந்தியாவின் அண்டை நாடுகளை மிரட்டும் வகையில், அந்த நாடுகளுக்கு மறைமுக மிரட்டல்களை சீனா விடுத்து வருவதாக கூறப்படுகிறது. சீனாவின் 14 அண்டை நாடுகள், இந்தியாவுடன் எந்தவொரு நெருக்கமும் கொள்ளக் கூடாது என்பதற்காக தந்திர வேலைகளில் சீனா ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில், பிரதமர் மோடி லடாக் எல்லைக்கு  சென்ற போது, ‘விரிவாக்க சகாப்தம் முடிந்து விட்டது’ என்று மறைமுகமாக சீனாவை குறிவைத்து பேசியதும் சர்வதேச கவனத்தை பெற்றது. ‘தி பூட்டானியசின்’ பத்திரிகை ஆசிரியர் டென்சிங் லாம்சாங் வெளியிட்ட டுவிட்டரில், ‘1984ம் ஆண்டு முதல் நடந்த 24 எல்லை பேச்சுவார்த்தைகளில் இரண்டு சர்ச்சைக்குரிய பகுதிகள் மட்டுமே எழுப்பப்பட்டுள்ளன. பேச்சுவார்த்தையில் சீன தரப்பு தற்போதைய சாகதெங் விவகாரம் குறித்து பேசவில்லை. அதனால், கிழக்கு பூடான் குறித்து எந்த சர்ச்சையும் இல்லை’ என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே சீனாவின் புதிய எல்லை உரிமைகோரல்கள் குறித்து டெல்லியில் உள்ள பூடானின் தூதரை கேட்டபோது, அவர் கருத்துக் கூற மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.* மூக்கை உடைத்த ஐநா அமைப்பு‘சாக்தெங் சரணாலயத்துக்கு நிதி கொடுக்கக் கூடாது’ என்று சீனா முட்டுக்கட்டை போட்ட போது, அதற்கு ஐநா.வின் உலகச் சுற்றுச்சூழல் வசதிக்கான வளர்ச்சித் திட்ட அமைப்பு விளக்கம் அளித்தது. அதில், ‘பூடான் குறித்து சீனா தரப்பு கூறிய கருத்தை முற்றிலுமாக நிராகரிக்கிறோம். சாக்தெங் வனவிலங்கு சரணாலயம் பூடானின் ஒரு ஒருங்கிணைந்த மற்றும் இறையாண்மை கொண்ட பிரதேசமாகும். பூடானுக்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை பேச்சுவார்த்தையின் போது எந்த நேரத்திலும் இது ஒரு சர்ச்சைக்குரிய பகுதியாக இடம்பெறவில்லை’ என்று கூறியது.* அண்டை நாடுகள்இந்தியா, வட கொரியா, ரஷ்யா, மங்கோலியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம், பூடான், மியான்மர், லாவோஸ் மற்றும் வியட்நாம்.

மூலக்கதை