கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ பாடத்திட்டம் 30 சதவீதம் குறைப்பு: மத்திய அரசு அறிவிப்பு

தினகரன்  தினகரன்
கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ பாடத்திட்டம் 30 சதவீதம் குறைப்பு: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: கொரோனா பரவலை தடுக்க, நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் கடந்த மார்ச் 16ம் தேதி முதல் மூடப்பட்டன. கல்வி நிலையங்கள் தொடர்ந்து மூடப்பட்டதைத் தொடர்ந்து, 1 முதல் 9ம் வகுப்பு வரையிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 10ம் வகுப்பு தேர்வுகள், நிலுவையில் இருந்த 12ம் வகுப்பு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், சிபிஎஸ்இ 9 முதல் 12ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தை 30%  குறைப்பாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது டிவிட்டர் பதிவில், ‘‘கொரோனாவால் நாட்டில் நிலவும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பாட திட்டத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு, கல்வி நிறுவனங்களின் ஆலோசனை கோரப்பட்டது. இதற்கு 1,500 பரிந்துரைகள் கிடைக்க பெற்றன. கற்றலின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, முக்கியமான உள்ளடக்கங்களை மட்டும் வைத்து கொண்டு, பாடத்திட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து 30 சதவீதம் வரை குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

மூலக்கதை