பதற்றமான லடாக் எல்லையில் நள்ளிரவு பயிற்சியில் போர் விமானங்கள்: எந்த சூழலிலும் செயல்பட தயாராகும் இந்திய வீரர்கள்

தினகரன்  தினகரன்
பதற்றமான லடாக் எல்லையில் நள்ளிரவு பயிற்சியில் போர் விமானங்கள்: எந்த சூழலிலும் செயல்பட தயாராகும் இந்திய வீரர்கள்

புதுடெல்லி: பதற்றமான லடாக் எல்லையில் எந்த சூழலிலும் செயல்படத் தயாராகும் வகையில், இந்திய போர் விமானங்கள் நள்ளிரவு பயிற்சியில் ஈடுபட்டன. லடாக்கில் உள்ள  கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய, சீன ராணுவத்தினர் இடையே கடந்த மாதம் 15ம் தேதி நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதன்பின், இரு நாட்டு ராணுவப் படைகளும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே குவிக்கப்பட்டன. இந்திய எல்லையை ஒட்டி சீனா முகாம்களையும், ஹெலிபேடுகள் உள்ளிட்ட கட்டமைப்புகளை அமைத்தது.பதிலுக்கு இந்தியாவும் தனது படைகளை எல்லை நோக்கி நகர்த்தியது. லடாக் அருகே உள்ள விமானப்படை தளத்தில் போர் விமானங்கள் தயார் நிலையில் நிலைநிறுத்தப்பட்டன. இதனால், எல்லையில் பதற்றம் நீடித்து வந்தது. இதற்கிடையே, இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, சீனப் படைகள் கல்வான் மோதல் நடத்த பகுதியில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்குப் பின்னோக்கி சென்றன. எனினும், கல்வான் எல்லைக் கட்டுப்பாடு கோட்டிற்கு அருகே ஆயுதங்களுடன் சீனப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளது.இந்த சூழலில் லடாக் எல்லையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இந்திய போர் விமானங்கள் திடீர் பயிற்சியில் ஈடுபட்டன. மிக்-29, சுகாய்-30, அப்பாச்சி ஹெலிகாப்டர்கள், சினுக் பல்நோக்கு ஹெலிகாப்டர்கள் வானில் சீறிப்பாய்ந்து பயிற்சி செய்தன. பொதுவாக விமான பயிற்சிகளும் ரோந்து பணிகளும் பகல் நேரத்தில் மட்டுமே நடக்கும். இரவு நேரத்தில் எல்லையை ஒட்டி போர் விமானங்கள் பறப்பது மிக அரிதானது. இது குறித்து முன்னாள் விமானப்படை மார்ஷல் பாலி எச் மேஜர் கூறுகையில், ‘‘எந்த சூழலிலும், எந்த நேரத்திலும், எந்த தட்பவெப்ப நிலையிலும் இந்திய விமானப்படை செயல்பட தயாராக இருக்கிறது என்பதை காட்ட இந்த பயிற்சி நடத்தப்பட்டு இருக்கலாம். லடாக் எல்லை பல்வேறு கடினமான மலைகளை கொண்ட சிக்கலான பகுதி. எனவே, அவசர காலத்தில் இரவிலும் திறம்பட செயல்பட வேண்டுமென விமானப்படை பயிற்சியில் ஈடுபட்டிருக்கும். இதன் மூலம் 24 மணி நேரமும் நமது விமானப்படை தயாராக இருப்பதாக சீனாவுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது,’’ என்றார். இதுமட்டுமின்றி, கல்வான் மோதலைத் தொடர்ந்து விமானப்படைக்கு 33 நவீன ரக போர் விமானங்கள் உட்பட ரூ.38,900 கோடிக்கு முப்படைகளுக்கான ஆயுதங்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.* 2வது நாளாக படைகளை திரும்ப பெறும் சீனாலடாக் எல்லையில் நேற்று முன்தினம் முதலே சீனா படைகள் வாபஸ் பெற தொடங்கின. கல்வான் பள்ளத்தாக்கின் 14வது ரோந்து பகுதியில் இருந்து ஏற்கனவே கூடாரங்களை சீனா அகற்றிவிட்டது. அங்கிருந்த ராணுவ வீரர்கள் திரும்ப பெறப்பட்டனர். 2வது நாளாக நேற்றும் சீன ராணுவம் தனது முகாம்களை அகற்றியது. கிழக்கு லடாக்கின் கோக்ராவில் இருந்து தற்காலிக உள்கட்டமைப்புக்கள் நேற்று அகற்றப்பட்டன. இதனை இந்திய வீரர்கள் உன்னிப்பாக கண்காணிக்கின்றனர். இந்திய ராணுவம் தனது பாதுகாப்பை குறைக்கவில்லை. அடுத்த 2 நாட்களுக்குள் இரு நாட்டு வீரர்களும் பரஸ்பரம் திரும்ப பெறப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது, மேலும் குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து கணிசமாக சீன வீரர்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.* இந்தியாவுக்கு அமெரிக்கா துணை நிற்கும்சீனாவுடனான மோதலில் இந்தியாவுக்கு அமெரிக்கா துணை நிற்கும் என உறுதி அளித்துள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி மார்க் மீடோஸ் அளித்த பேட்டியில், ‘‘எந்த நாடும் தங்களை சக்தி வாய்ந்தவராக வெளிப்படுத்த மற்ற நாடுகளை அடக்கி, தங்களின் ஆதிக்கத்தை செலுத்தினால் அது சீனாவாக இருந்தாலும் அதற்கு நாங்கள் துணை நிற்கமாட்டோம். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவில் மோதலோ அல்லது வேறு எங்கு இருந்தாலும் சரி, எங்கள் ராணுவம் நட்புறவுக்கு வலுவாக நிற்கும், துணை நிற்கும்,’’ என உறுதி அளித்துள்ளார்.

மூலக்கதை