துரத்துவோம் வைரசை! தனிமை பகுதிகளில் வீடு வீடாக நோய் எதிர்ப்பு சக்தி 'கிட்' சப்ளை

தினமலர்  தினமலர்
துரத்துவோம் வைரசை! தனிமை பகுதிகளில் வீடு வீடாக நோய் எதிர்ப்பு சக்தி கிட் சப்ளை

கோவை நகர் பகுதியில், தினமும், 30க்கும் மேற்பட்டோருக்கு, 'கொரோனா' தொற்று உறுதி செய்யப்படுகிறது. செட்டி வீதி உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில், 140 பேருக்கு தொற்று பரவி இருக்கிறது.தொற்று உறுதி செய்த பகுதிகள், உடனடியாக, தனிமைப்படுத்தப்படுகிறது. அங்கு வசிப்பவர்கள், 14 நாட்கள் வெளியே செல்லக்கூடாது; வெளிநபர்கள் அப்பகுதிக்குள் செல்லக்கூடாது.
அங்கு வசிப்பவர்களுக்கு தொற்று உறுதியாக வாய்ப்பு இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கான 'கிட்', மாநகராட்சி சார்பில் இலவசமாக வழங்கப்படுகிறது.இதுதொடர்பாக, சுகாதாரத்துறையினர் கூறியதாவது: தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, 100 மி.கி., மல்டி வைட்டமின் மாத்திரை, தினமும் ஒரு வேளை வீதம், 10 நாட்கள் உட்கொள்ள வேண்டும். ஜிங்க் 50 மி.கி., மாத்திரை, தினமும் ஒரு வேளை வீதம், 10 நாட்கள் உட்கொள்ள வேண்டும்.
பெரியவர்கள் ஒரு மாத்திரை, சிறியவர்கள் அரை மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும்.கபசுர குடிநீர் பொடி, ஒரு டீ ஸ்பூன் எடுத்து, 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, வடிகட்டி, காலை மட்டும், வெறும் வயிற்றில் குடிக்கவும். ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், மூன்று மாத கர்ப்பிணிகள் குடிக்க வேண்டாம்.'கொரோனா' பரிசோதனை செய்து கொண்ட அனைவரும், 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறி இருந்தால், அருகிலுள்ள மருத்துவமனையில் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். தனி மனித இடைவெளி பின்பற்ற வேண்டும். அடிக்கடி கை கழுவுவதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். நோய் சம்பந்தமாக பேச விரும்பினால், 0422 - 230 2323 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மூலக்கதை