ஆன்லைன் கல்வி: வெளிநாட்டு மாணவர்களை வெளியேற்ற அமெரிக்கா முடிவு

தினமலர்  தினமலர்
ஆன்லைன் கல்வி: வெளிநாட்டு மாணவர்களை வெளியேற்ற அமெரிக்கா முடிவு

வாஷிங்டன்: அமெரிக்காவில் தங்கிப் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், ஆன்லைன் கல்வி முறைக்கு மாறினால், அவர்களை அமெரிக்காவிலிருந்து வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.



அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை (ஐ.சி.இ.,) தெரிவித்துள்ளதாவது:கொரோனா பரவலால், அமெரிக்காவில் உள்ள பல்கலைகள், அனைத்து பாடப்பிரிவுகளையும் ஆன்லைன் கல்வி முறைக்கு மாற்றி வருகின்றன. அதனால், அமெரிக்காவில் தங்கியுள்ள வெளிநாட்டு மாணவர்கள், ஆன்லைன் கல்வி முறைக்கு மாறி வருகின்றனர். அவ்வாறு ஆன்லைன் கல்விக்கு மாறிய மாணவர்கள், அமெரிக்காவில் தொடர்ந்து தங்க முடியாது.


ஆன்லைன் மூலம் படிப்பதற்கு தங்களை பதிவு செய்த மாணவர்கள், நேரடியாக வகுப்பறையில் கற்கும் வகையில் தங்கள் பாட திட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், குடியேற்றம் தொடர்பான விதிமீறல்கள் உள்ளிட்ட சட்ட விளைவுகளை அவர்கள் சந்திக்க நேரிடும். அமெரிக்காவில் இருந்து அவர்கள் கட்டாயமாக வெளியேற்றப்படுவர்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா வைரஸ் தொற்றால், அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான பல்கலைகள், ஆன்லைன் முறையில் தற்போது வகுப்புகள் நடத்தி வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவின் இந்த முடிவால், எவ்வளவு லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்பது குறித்து இன்னும் தெளிவான அறிக்கை வெளிவரவில்லை.

'கடந்த 2018ம் ஆண்டில் அமெரிக்க பொருளாதாரத்தில் வெளிநாட்டு மாணவர்களின் பங்கு, 45 பில்லியன் டாலர்கள் அளவுக்கு இருந்தது. இந்நிலையில் தற்போது அரசு எடுத்துள்ள இந்த முடிவு மிகப்பெரிய பொருளாதார இழப்பை அமெரிக்காவுக்கு ஏற்படுத்தும்' என, வல்லுநர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை