ஹரியானாவில் 75 சதவீத தனியார் வேலைகள் சொந்த மாநிலத்தவருக்கே...: புதிய மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

தினகரன்  தினகரன்
ஹரியானாவில் 75 சதவீத தனியார் வேலைகள் சொந்த மாநிலத்தவருக்கே...: புதிய மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

சண்டிகர்: ஹரியானாவில் 75 சதவீத தனியார் வேலைகள் சொந்த மாநிலத்தவருக்கே என்ற புதிய மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் நிறுவனத்தை தொடங்கும் பன்னாட்டு நிறுவனங்களில், அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்குதான் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று நம் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் சட்டம் இருப்பதாக தெரியவில்லை. இதன் காரணமாக, சொந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் வேலைவாய்ப்பு பறிப்போவதாக பல்வேறு மாநிலங்களில் பரவலாக கண்டன குரல்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தனியார் நிறுவனங்களின வேலைவாய்ப்பில் சொந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 75 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கிட வகைச் செய்யும் சட்டத்திருத்துக்கு ஹரியானா மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பாஜக கூட்டணி கட்சியான துஷ்யந்த் சவுதாலாவின் ஜன்னாயக் ஜனதா கட்சி, தேர்தல்களில், முக்கியமாக தனியார் துறை வேலைகளில், மாநில இளைஞர்களுக்கு 75 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதாக உறுதியளித்திருந்தது. அதன்படி ஹரியானாவில் தனியார் பணிகளில் இளைஞர்களுக்கு 75% இடஒதுக்கீடு அளிக்கும் வரைவு மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இதற்கு அமைச்சரவை ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய துஷ்யந்த் சவுதாலா, இது ஹரியானா மாநில இளைஞர்களுக்கு வரலாற்று சிறப்புமிக்க நாள். ஏனெனில் இப்போது தனியார் துறை தொழில்கள் மற்றும் நிறுவனங்கள் அரியானாவின் இளைஞர்களுக்கு 75 சதவீத வேலைகளை வழங்குவது கட்டாயமாக இருக்கும்,  என்று கூறியுள்ளார். கொரோனா அச்சத்தின் காரணமாக, பணிநிமித்தம் பல்வேறு மாநிலங்களில் புலம்பெயர்ந்து வாழ்ந்துவந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு தொடர்ந்து திரும்பி வருகின்றனர். இத்தகைய சூழலில், ஹரியானா மாநில அரசு இடஒதுக்கீடு தொடர்பாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை