ஒரு வாரத்திற்குள் தொடங்குகிறது கொரோனா தடுப்பூசி பரிசோதனை: 10 மாநிலங்களில் நோயாளிகளுக்கு சோதனை நடத்த அனுமதி

தினகரன்  தினகரன்
ஒரு வாரத்திற்குள் தொடங்குகிறது கொரோனா தடுப்பூசி பரிசோதனை: 10 மாநிலங்களில் நோயாளிகளுக்கு சோதனை நடத்த அனுமதி

டெல்லி: கொரோனாவை கட்டுப்படுத்த உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பு மருந்து சோதனையை ஒரு வாரத்திற்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. காட்டுத்தீயாய் வேகமெடுத்துள்ள கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன. இந்தியாவில் நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஹைதராபாத்தில் செயல்படும் பாரத் பையோடெக், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதி அளித்தது. தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்துக்கான சோதனைகளை மேற்கொள்ள நாடு முழுவதும் 10 மாநிலங்களில் 12 மருத்துவமனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அடுத்த மாதம் 15-ம் தேதிக்குள் தடுப்பு மருந்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ள நிலையில் 12 மருத்துவமனைகளில் ஒன்றான கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஜீவன் ரேகா மருத்துவமனையில் சோதனைக்கான அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் சோதனையை துவங்க உள்ளதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி சோதனை தொடங்க உள்ளதை வரவேற்றுள்ள கர்நாடகா அமைச்சர் வைரஸ் தொற்று அதிகரித்து வரும் சூழலில் சோதனை முயற்சி நிச்சயம் நல்ல பலனை அளிக்கும் என்று கூறினார். நோய் தடுப்பு முழு அளவில் பயன்பாட்டிற்கு வர 3 ஆண்டுகள் ஆகும் என்பதால் கோவாக்சின் சோதனை முயற்சியை துரித படுத்த வேண்டும் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தனர். வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கோவாக்சின் முயற்சி மக்களின் அச்சத்தை போக்கும் என்றாலும், அவசர கதியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தொடங்கியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

மூலக்கதை