‘ஹேப்பி பெர்த் டே’ தோனி | ஜூலை 06, 2020

தினமலர்  தினமலர்
‘ஹேப்பி பெர்த் டே’ தோனி | ஜூலை 06, 2020

ராஞ்சி: இந்திய அணியின் தோனி, ஜூலை 7ல் தனது 39வது பிறந்த நாள் கொண்டாடுகிறார்.

இந்திய அணி ‘சீனியர்’ வீரர் ‘தல’ தோனி 39. தனது 18 வயதில் (1999–2000) ரஞ்சி தொடரில் களமிறங்கினார். கடந்த 2007ல் ‘டுவென்டி–20’ உலக கோப்பை, 2011ல் ஒருநாள் உலக கோப்பை, 2013ல் ‘மினி’ உலக கோப்பை (‘சாம்பியன்ஸ் டிராபி’) என ஐ.சி.சி., நடத்தும் மூன்று முக்கிய தொடர்களிலும் கோப்பை வென்று தந்த ஒரே கேப்டன். 

தவிர 2008ல் ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் கோப்பை, 2009ல் இந்திய டெஸ்ட் அணியை ‘நம்பர்–1’ இடத்துக்கு கொண்டு சென்றது உட்பட பல்வேறு சாதனைகள் படைத்தவர். 

கிரிக்கெட் அரங்கில் அதிக போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தவர்களில் ‘முதல்வன்’ தோனி தான். இவர் 332 போட்டிகளில் கேப்டனாக களமிறங்கினார். பாண்டிங் (324, ஆஸி.,), பிளமிங் (306, நியூசி.,) அடுத்த இரு இடங்களில் உள்ளனர். 

ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணிக்கு 2010, 2011, 2018 என மூன்று முறை கோப்பை வென்று தந்தார். கடைசியாக 2019 உலக கோப்பை தொடருக்குப் பின் 13வது ஐ.பி.எல்., சீசனில் களமிறங்க காத்திருந்தார். கொரோனா பரவல் காரணமாக இது தள்ளிப் போக, தோனி ரசிகர்கள் ஏமாந்தனர். இன்று இவருக்கு 39வது பிறந்த நாள். சமூக வலைத்தளங்களில் தோனிக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன. ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர். 

மூலக்கதை