இங்கிலாந்து–விண்டீஸ் பலப்பரீட்சை * நாளை துவங்குகிறது டெஸ்ட் தொடர் | ஜூலை 06, 2020

தினமலர்  தினமலர்
இங்கிலாந்து–விண்டீஸ் பலப்பரீட்சை * நாளை துவங்குகிறது டெஸ்ட் தொடர் | ஜூலை 06, 2020

சவுத்தாம்ப்டன்: கொரோனா காரணமாக தடைபட்ட கிரிக்கெட் மீண்டும் நாளை முதல் துவங்குகிறது. இங்கிலாந்து, விண்டீஸ் அணிகள் முதல் டெஸ்டில் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

கொரோனா வைரஸ் காரணமாக ஸ்தம்பித்த விளையாட்டு உலகம் மெல்ல மீண்டு வருகிறது. இதையடுத்து இங்கிலாந்து அணி சொந்தமண்ணில், விண்டீசிற்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நாளை சவுத்தாம்ப்டன் மைதானத்தில் துவங்குகிறது. 

இதற்காக இங்கிலாந்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட விண்டீஸ் அணியினருக்கு கொரோனா சோதனை நடந்தது. இதில் இருந்து தப்பிய அனைவரும் இரண்டு பயிற்சி போட்டியில் பங்கேற்றனர். இதில் சதம், அரைசதங்கள் விளாசிய ஜோசுவா டா சில்வாவுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

இருப்பினும் ஹோல்டர் தலைமையிலான விண்டீஸ் அணியில், பயிற்சியில் 8 விக்கெட் சாய்த்த ‘சீனியர்’ வீரர் கேபிரியல், பிராத்வைட், ராஸ்டன் சேஸ், ஷாய் ஹோப் கீமர் ரோச் மற்றும் அல்ஜாரி ஜோசப் அணிக்கு பலம் சேர்க்க காத்திருக்கின்றனர்.

இங்கிலாந்து அணியில் ஜோ ரூட், தனது மனைவி பிரசவத்துக்கு சென்றதால் பென் ஸ்டோக்ஸ் முதன் முறையாக கேப்டன் பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு பர்ன்ஸ், பட்லர் மற்றும் ‘சீனியர்’ வேகப்பந்து வீச்சாளர்கள் ஆண்டர்சன், ஜோப்ரா ஆர்ச்சர் கைகொடுக்க காத்திருக்கின்றனர்.

விண்டீஸ் தொடரை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக 3 டெஸ்ட் என இங்கிலாந்து பங்கேற்க உள்ளதால், வேகப்பந்து வீச்சாளர்கள் சுழற்சி முறையில் பயன்படுத்தப்பட உள்ளனர்.

இதனால், 2012க்குப் பின் முதன் முறையாக சொந்தமண்ணில் ஸ்டூவர்ட் பிராட், டெஸ்டில் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது.

 

57

இங்கிலாந்து, விண்டீஸ் அணிகள் 157 டெஸ்டில் மோதின. இதில் விண்டீஸ் 57ல் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்துகிறது. இங்கிலாந்து 49ல் வென்றது. 51 டெஸ்ட் ‘டிரா’ ஆகின.

மூலக்கதை