கல்வான் பள்ளத்தாக்கில் படைகள் வாபஸ்! இந்திய - சீன அதிகாரிகள் பேச்சில் முடிவு

தினமலர்  தினமலர்
கல்வான் பள்ளத்தாக்கில் படைகள் வாபஸ்! இந்திய  சீன அதிகாரிகள் பேச்சில் முடிவு

புதுடில்லி: இந்திய - சீன எல்லையில் நிலவும் பதற்றத்தை குறைப்பது தொடர்பாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயுடன், பேச்சு நடத்தினார். இதில், எல்லையில் குவிக்கப்பட்டுள்ள படைகளை, இருதரப்பும் உடனடியாக வாபஸ் பெறுவது என்றும், அமைதியான சூழலை தொடர்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் குவிக்கப்பட்டிருந்த சீன வீரர்கள், நேற்று வாபஸ் பெறப்பட்டனர். தற்காலிகமாக அமைத்திருந்த கூடாரங்கள், முகாம்களையும், அவர்கள் அகற்றினர்.

நம் அண்டை நாடான சீனா, சமீபகாலமாக, எல்லையில் மோதல் போக்கை பின்பற்றி வருகிறது. காஷ்மீர் அருகே, லடாக் எல்லைப் பகுதியில் கட்டுமான பணிகளை மேற்கொள்வது, இந்திய பகுதிக்குள் ஹெலிகாப்டர்களை பறக்கவிட்டு கண்காணிப்பது போன்ற அத்துமீறலில், சீன ராணுவத்தினர் ஈடுபட்டு வந்தனர்.

பேச்சு:

கடந்த மாதம், 15ல், லடாக் எல்லையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதிக்கு அருகே கூடாரங்களை அமைத்ததுடன், எல்லைக்குள் அத்துமீறி நுழையவும் முயன்றனர்; இதை நம் வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில், சீன வீரர்கள் இரும்புத் தடி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதில், நம் வீரர்கள், 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் சில வீரர்கள் பலியானதாக கூறப்படுகிறது; ஆனால், சீன ராணுவம், இதைத் தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்த சம்பவத்தை அடுத்து, எல்லையில் நிலைமை மோசமானது. இருதரப்பும் வீரர்களை குவித்தன. அந்தப் பகுதியில், போர் விமானங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டன. ஒரு பக்கம் பதற்றமான சூழல் நிலவினாலும், மற்றொரு பக்கம் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையே, தொடர்ந்து அமைதி பேச்சு நடந்தது. மூன்று சுற்றுக்களாக நடந்த இந்த பேச்சில், 'லடாக் எல்லையில், ஏற்கனவே இருந்தது போன்ற நிலைமை தொடர வேண்டும்' என, நம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

எல்லையில் அமைதியை ஏற்படுத்த, அங்கு குவிக்கப்பட்டுள்ள படைகளை, படிப்படியாக வாபஸ் வாங்குவது என்றும், துாதரக மற்றும் ராணுவ அளவில் தொடர்ந்து பேச்சு நடத்துவது என்றும், இந்த பேச்சில் முடிவு செய்யப்பட்டது.


பதிலடி:

இதற்கிடையே, பிரதமர் மோடி, சமீபத்தில் லடாக் சென்று, ராணுவ வீரர்களிடையே உரை நிகழ்த்தினார். நம் ராணுவத்தின் பெருமைகளை பட்டியலிட்ட அவர், 'எல்லையில் யார் வாலாட்டினாலும், அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்' என்றார். இந்த பரபரப்பான சூழலில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயுடன், நேற்று முன்தினம் தொலைபேசியில் பேசினார்.

இது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சீன வெளியுறவு அமைச்சருடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நடத்திய பேச்சு, வெளிப்படையானதாகவும், சர்ச்சைக்குரிய விஷயங்களை, மிகவும் ஆழமாக விவாதிக்கும் வகையிலும் இருந்தது. இந்தப் பேச்சில், எல்லையில் அமைதியான சூழலை ஏற்படுத்தும் வகையில், இரு நாடுகளும், படைகளை உடனுக்குடன் வாபஸ் வாங்குவது என, முடிவு எடுக்கப்பட்டது.

எவ்வளவு விரைவாக படைகளை வாபஸ் வாங்குகிறோமோ, அவ்வளவு விரைவில் எல்லையில் அமைதி திரும்பும் என, இரு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது. எல்லை தொடர்பான விஷயத்தில், ஏற்கனவே இருதரப்புக்கும் ஏற்பட்ட ஒப்பந்த விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும், எவ்விதமான ஒருதலைப்பட்சமான முடிவையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது. எல்லையில் மீண்டும் ஒரு அசம்பாவித சம்பவம் நடக்காமல் இருப்பதை, இரு நாடுகளும் உறுதி செய்ய வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த பேச்சைத் தொடர்ந்து, எல்லை பகுதியில், நேற்று திடீர் திருப்பம் ஏற்பட்டது. கல்வான் பள்ளத்தாக்கு அருகே குவிக்கப்பட்டிருந்த சீன வீரர்கள், 1 கி.மீ., துாரத்துக்கு பின் வாங்கிச் சென்றனர். அந்தப் பகுதியில் அமைத்திருந்த கூடாரங்கள், முகாம்களையும், அவர்கள் அகற்றினர். கோக்ரா பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சீன ராணுவ வாகனங்கள், அந்த பகுதியிலிருந்து அணிவகுத்து பின்வாங்கிச் சென்றன. நம் தரப்பிலிருந்தும் எல்லையில் குவிக்கப்பட்டிருந்த சில வீரர்கள் வாபஸ் பெற்றதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.

சீன வெளியுறவு அமைச்சகமும், இந்த தகவலை உறுதி செய்துள்ளது. 'இருதரப்புக்கும் இடையே நடந்த பேச்சின் அடிப்படையில், எல்லையில் பதற்றத்தை குறைக்கும் வகையில், படைகள் வாபஸ் பெறப்படுகின்றன' என, சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. எல்லைப் பகுதியில் இருதரப்பும் வாபஸ் பெறப்படுவதால், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், கடந்த சில வாரங்களாக நிலவி வந்த பதற்றம், விரைவில் முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை