அவலம்! அரசு வேலைவாய்ப்பு எட்டாக்கனியான...விரக்தியில் பட்டதாரி இளைஞர்கள்

தினமலர்  தினமலர்
அவலம்! அரசு வேலைவாய்ப்பு எட்டாக்கனியான...விரக்தியில் பட்டதாரி இளைஞர்கள்

புதுச்சேரி : புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பட்டப் படிப்பை முடித்துவிட்டுவெளியே வருகின்றனர். ஆனால், அரசு வேலைவாய்ப்பு என்பது எட்டாக்கனியாக மாறி விட்டது.

புதுச்சேரியில் மருத்துவம், பொறியியல், பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், நர்சிங், பாரா மெடிக்கல், விவசாயம், சட்டம், பி.எட்., கேட்டரிங், கலை மற்றும் அறிவியல் என, 145 கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில், அரசு கல்லுாரிகளின் எண்ணிக்கை 38; தனியார் கல்லுாரிகள் 107 ஆகும்.புதுச்சேரியில் உள்ள கல்லுாரிகளில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பட்டப் படிப்பையும், பட்ட மேற்படிப்பை யும் முடித்துவிட்டு பட்டதாரிகளாக வெளியே வருகின்றனர்.

உயர் கல்வி மையமாக திகழும் புதுச்சேரியில், அரசு வேலைவாய்ப்பு என்பது எட்டாக் கனியாக மாறி வருகிறது. தற்போதைய அரசு பொறுப்பேற்று கடந்த 4 ஆண்டுகளில் அளிக்கப்பட்ட அரசு வேலைவாய்ப்புகளை விரல் விட்டு எண்ணி விடலாம். அரசு துறைகளில் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இவற்றில் பல காலாவதியாகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.உதாரணமாக, அரசின் மிகப் பெரிய துறைகளில் ஒன்றான பொதுப்பணித் துறையில் கடைசியாக 1988ம் ஆண்டில் இளநிலைப் பொறியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் நடந்தது.

அப்போது பொறியியல் டிகிரி, டிப்ளமா படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. அதற்கு பின், 33 ஆண்டுகளாகியும் இளநிலைப் பொறியாளர் பதவிகளுக்கு நேரடி நியமனம் நடத்தப்படவில்லை. பொதுப்பணித் துறையில் 75க்கும் மேற்பட்ட இளநிலைப் பொறியாளர் பணியிடங்கள் காலியாக இருந்தபோதும், பொறியியல் பட்டதாரி இளைஞர்களை கொண்டு நிரப்பப்படவில்லை. மின்துறையை எடுத்துக் கொண்டால், கடைசியாக கடந்த 2006ம் ஆண்டில் இளநிலைப் பொறியாளர்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட்டனர். எலக்ட்ரிக்கல் பொறியியல் முடித்த இளைஞர்கள் பயன் அடைந்தனர்.

அதற்கு பிறகு, கடந்த 14 ஆண்டுகளாக மின்துறையில் இளநிலைப் பொறியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படாமல் உள்ளது. இந்த பதவிகளை நிரப்புவதற்கு, பல்வேறு முட்டுக்கட்டைகளை தாண்டி, அமைச்சர் கமலக்கண்ணன் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். புதுச்சேரியை பொறுத்தவரை மற்ற கல்லுாரிகளைவிட, பொறியியல் கல்லுாரிகளின் எண்ணிக்கையே அதிகம். அரசு பொறியியல் கல்லுாரிகள் 2, தனியார் பொறியியல் கல்லுாரிகள் 16 என மொத்தம் 18 பொறியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் வெளியே வந்தும், புதுச்சேரியில் பல ஆண்டுகளாக அரசு வேலைவாய்ப்புகள் இல்லை. தனியார் நிறுவனங்களிலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வேலை இல்லை. இதனால், பொறியியல் படித்துவிட்டு, படிப்பிற்கு சம்பந்தமே இல்லாத வேலையை செய்து கொண்டுள்ளனர்.ஆண்டுகள் கடந்து கொண்டு இருப்பதால், அரசு வேலைக்கான வயது வரம்பை கடந்து இளைஞர்கள் விரக்தியில் உள்ளனர்.ஆண்டுகள் கடந்து கொண்டு இருப்பதால், அரசு வேலைக்கான வயது வரம்பை கடந்து இளைஞர்கள் விரக்தியில் உள்ளனர்.

மூலக்கதை