கோரிக்கை! சிதம்பரத்தை தனி மாவட்டமாக பிரிக்க... முதல்வர் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு

தினமலர்  தினமலர்
கோரிக்கை! சிதம்பரத்தை தனி மாவட்டமாக பிரிக்க... முதல்வர் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு

பரங்கிப்பேட்டை : கடலுார் மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளில், நான்கு சட்டசபை தொகுதிகளை வைத்து, சிதம்பரத்தை தலைமையிடமாக கொண்டு, தனி மாவட்டமாக பிரிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில், பெரிய மாவட்டங்கள் அதன் வளர்ச்சிக்காகவும், மக்களின் நலனுக்காகவும், பிரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2007ம் ஆண்டு நான்கு சட்டசபை தொகுதிகள் அடங்கிய, பெரம்பலுார் மாவட்டத்தை, பெரம்பலுார், குன்னம் ஆகிய இரண்டு சட்டசபை தொகுதிகளை வைத்து, பெரம்பலுார் மாவட்டமாகவும், அரியலுார், ஜெயங்கொண்டம் தொகுதிகளை வைத்து, அரியலுார் மாவட்டமாகவும் பிரிக்கப்பட்டது.

தற்போது, விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து, கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாகவும், வேலுார் மாவட்டத்தை பிரித்து திருப்பத்துார், ராணிப்பேட்டை என தனி மாவட்டமாகவும், நாகப்பட்டினம் மாவட்டத்தை பிரித்து, மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் அதிகளவில், பயனடைந்து வருகின்றனர்.
9 சட்டசபை தொகுதிகள் :
ஆனால், 9 சட்டசபை தொகுதிகளை கொண்ட, கடலுார் மாவட்டம் இன்னும் பிரிக்கப்படாமல் உள்ளது. மக்களின் நலனுக்காகவும், மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவும், கடலுார் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, குறிஞ்சிப்பாடி ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளை கொண்டு, சிதம்பரத்தை தலைமையிடமாக கொண்டு, தனி மாவட்டமாக பிரிக்க வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தொடர்ந்து, வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், இதே கோரிக்கையை வலிறுயுத்தி, சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏ., பாண்டியன் சட்ட சபையில் பேசி வருகிறார். இந்த கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.எனவே, மக்களின் நலனுக்காவும், மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவும், சிதம்பரத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக பிரிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூலக்கதை