'சர்வதேச அமைப்புகளில் பொறுப்பான நாடு இந்தியா'

தினமலர்  தினமலர்
சர்வதேச அமைப்புகளில் பொறுப்பான நாடு இந்தியா

நியூயார்க்: 'சர்வதேச அமைப்புகளில் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ளும் இந்தியா, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெறுவதால், அது மேலும் வலுப்படும்' என, ஐ.நா., பொது சபை தலைவர், திஜானி முகமது பண்டே கூறியுள்ளார்.

ஐ,நா., பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது. வரும், 2021 ஜனவரியில் இருந்து, இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியா உறுப்பினராக இருக்கும்.பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து, ஐ.நா., பொது சபை தலைவர், திஜானி முகமது பண்டே கூறியதாவது:

தொழில்நுட்பம், மக்களின் பங்களிப்பு, சிறந்த ஆலோசனைகளை வழங்குவதில், இந்தியா மிகவும் முக்கியமான நாடாக உள்ளது. அதனால் தான், பல்வேறு சர்வதேச அமைப்புகளில், இந்தியா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாடாக உள்ளது.தான் இடம்பெறும் அமைப்புகளில், இந்தியா மிகவும் பொறுப்புள்ள நாடாக உள்ளது. தன் அண்டை நாடுகள் மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு நாடுகளுடன், இந்தியா நல்ல உறவில் உள்ளது. தற்போது, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இடம்பெறுவது, அந்த அமைப்புக்கு மேலும் வலிமையை சேர்க்கும்.

பல்வேறு துறைகளில் சிறப்பான செயல்பாடுகளை மேற்கொள்ள, மற்ற நாடுகளுடன் இணைந்து, இந்தியா சிறப்பான பங்களிப்பை அளிக்கும்.இதைத் தவிர, 2030ம் ஆண்டுக்கான நீடித்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கும் இந்தியாவின் பங்களிப்பு சிறப்பாக இருக்கும் என, எதிர்பார்க்கிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை