2 வாரத்தில் தயாரான கொரோனா சிறப்பு மருத்துவமனை; முதல்வர் இன்று திறப்பு

தினமலர்  தினமலர்
2 வாரத்தில் தயாரான கொரோனா சிறப்பு மருத்துவமனை; முதல்வர் இன்று திறப்பு

சென்னை : சென்னை, கிண்டியில் உள்ள, தேசிய முதியோர் நல மருத்துவமனை கட்டடம், இரண்டு வாரத்தில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை, முதல்வர் இ.பி.எஸ்., இன்று(ஜூலை 7) துவக்கி வைக்க உள்ளார்.


இதில், மொத்தம், 750 படுக்கை வசதிகள் உள்ளன. கொரோனா தொற்று சிகிச்சைக்காக, 500 படுக்கை வசதியும்; தீவிர சிகிச்சை பிரிவுக்காக, 70 படுக்கைகளும் பயன்படுத்தப்பட உள்ளன. அத்துடன், 300 படுக்கைகளில், ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கென நவீன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள, இந்த மருத்துவமனையை, விரைவில், முதல்வர் இ.பி.எஸ்., இன்று துவக்கி வைக்க உள்ளார்.

இது குறித்து, கொரோனா சிறப்பு மருத்துவமனையின் தொடர்பு அதிகாரி, ஆனந்த்குமார் கூறியதாவது: இந்த மருத்துவமனையில், 25 வென்டிலேட்டர் வசதி உள்ளது. நோயாளி மருத்துவமனைக்கு நுழையும் போது, ஆக்சிஜன் செலுத்தும் வகையில் வசதி உள்ளது. சி.டி., ஸ்கேன் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

கொரோனா நோயாளிகளின் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் வகையில், ஒரே நேரத்தில், 20 பேர் அமர்ந்து, 'டிவி' பார்க்கும் வசதி, 30 பேர் புத்தகம் படிக்கும் நுாலக வசதியும் உண்டு. வீடியோ காட்சிகள் வாயிலாக, 50 பேருக்கு யோகா பயிற்சி அளிப்பதற்கான வசதி உள்ளது. 'வைபை' வசதி உள்ளதால், நோயாளிகள் வீட்டில் உள்ளோரிடம், காணொலி காட்சியில் பேச முடியும்.


சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையிடம் ஒப்படைக்கப்பட உள்ள, இந்த மருத்துவமனைக்கு, தலா, 100 டாக்டர்கள், நர்ஸ்கள், மருந்தாளுனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து அறைகளும், காற்றோட்டமான வகையில் உள்ளன. இதனால், இங்கு சிகிச்சை பெறும் நோயாளிகள், வீட்டில் இருப்பதை போன்று உணர்வர். இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை