பீஹார் சட்டசபை தேர்தலில் தே.ஜ., கூட்டணி நீடிக்குமா?

தினமலர்  தினமலர்
பீஹார் சட்டசபை தேர்தலில் தே.ஜ., கூட்டணி நீடிக்குமா?

பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமாருக்கும், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானுக்கும் இடையே உரசல்கள் தீவிரம் ஆகியிருப்பதால், அம்மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில், ஆளும் தே.ஜ., கூட்டணி நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எதிர்பார்ப்பு:

பீஹார் சட்ட மேலவையில், காலியாகவுள்ள, எம்.எல்.சி., பதவிகளில், ஆளும் தே.ஜ., கூட்டணி வேட்பாளர்கள், 12 இடங்களில், எளிதாக வெற்றி பெறலாம். இதனால், இந்த இடங்களுக்கு, புதிய நியமனங்கள் செய்யும் நடவடிக்கைகள், தீவிரமாகியுள்ளன. இதை வைத்து தான், ஆளும் தே.ஜ., கூட்டணிக்குள், விரிசல்கள் முளைத்துள்ளன. இந்த, 12 இடங்களில், தங்களுக்கு ஏதாவது கிடைக்குமென, கூட்டணி கட்சிகளான, பா.ஜ.,வும் லோக் ஜனசக்தியும் எதிர்பார்க்கின்றன.

குறிப்பாக லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான், இரண்டு இடங்களை எதிர்பார்க்கிறார். ஆனால், நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளமோ, அனைத்து இடங்களிலும், தங்கள் வேட்பாளர்களையே நிறுத்த முடிவு செய்துள்ளது.

இது குறித்து, தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: எம்.எல்.சி., பதவிகளுக்கான நியமனம் குறித்து, இதுவரையில், இரண்டு ஆலோசனைக் கூட்டங்கள் நடந்து விட்டன. பெயரளவில் கூட, ஐக்கிய ஜனதாதளம், கூட்டணி கட்சிகளை ஆலோசிக்கவில்லை.கடந்த வாரம், ராம்விலாஸ் பஸ்வானுக்கு, பிறந்த நாள். பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உட்பட பல மூத்த அமைச்சர்கள், பா.ஜ., தலைவர் ஜே.பி.நட்டா என பலரும், அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஆனால், நிதிஷ்குமாரிடமிருந்து, கடைசி வரை வாழ்த்து வரவில்லை. பிரச்னைஇது, இரு தலைவர்கள் இடையே உள்ள உரசலை வெளிச்சம் போட்டுள்ள நிலையில், நிதிஷ்குமாரை, வயதில் இளையவரான சிராக் பஸ்வான் சரமாரியாக விமர்சிப்பது, பிரச்னையை மேலும் தீவிரமாக்கியுள்ளது. சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுக்கு நிகரான எண்ணிக்கையில், தங்களுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டுமென, சிராக் விரும்புகிறார். அது, நடக்குமா என்பது சந்தேகமே. இதை மோப்பம் பிடித்துள்ள, ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகள், லோக் ஜனசக்தியை, தங்களது கூட்டணிக்குள் வளைக்கப் பார்க்கின்றன.

இதெல்லாம் தெரிந்தும் கூட, நிதிஷ்குமார் அசைந்து கொடுக்க மறுக்கிறார். இது, வரவிருக்கும் சட்டசபை தேர்தலில், அதிக இடங்களைப் பெறுவதற்கான, பஸ்வானின் தந்திரமே எனக் கருதுகிறார்.எம்.எல்.சி., பதவிகளை வைத்து எழுந்துள்ள இந்த உரசல்கள், நாளுக்கு நாள் தீவிரம் பெறுவதை, முக்கிய கட்சியான, பா.ஜ., எப்படி கையாளப் போகிறது என்பதைப் பொறுத்தே, கூட்டணி நிலைக்குமா என்பது தெரிய வரும். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது டில்லி நிருபர் -

மூலக்கதை