இளம் வீரர்களின் நம்பிக்கை சுனில் செட்ரி...: பயிற்சியாளர் இகோர் பாராட்டு

தினகரன்  தினகரன்
இளம் வீரர்களின் நம்பிக்கை சுனில் செட்ரி...: பயிற்சியாளர் இகோர் பாராட்டு

புதுடெல்லி: இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் செட்ரி தொடர்ந்து விளையாடுவது அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு உற்சாகத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும் என்று பயிற்சியாளர்  இகோர் ஸ்டிமாக் தெரிவித்தார். கேப்டன் சுனில் செட்ரிக்கு 35 வயதானாலும், களத்தில் அவர் தொடர்ந்து உற்சாகமாகவும் துடிப்புடனும் விளையாடி அசத்தி வருகிறார். சர்வேதச போட்டிகளில் அதிக கோல் அடித்த இந்திய வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். இந்திய அணிக்காக 115 போட்டிகளில் விளையாடி 72 கோல் அடித்துள்ளார். தாய் நாட்டுக்காக அதிக கோல் அடித்த சர்வதேச வீரர்கள் பட்டியலில் 10வது இடத்தில் இருக்கிறார். இந்நிலையில் அவர் ஓய்வு பெறப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அது தனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். ‘சுனில் தொடர்ந்து விளையாட வேண்டும்’ என்று இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளரான இகோர் ஸ்டிமாக் தெரிவித்துள்ளார். ஊரடங்கு காரணமாக குரோஷியாவில் உள்ள தனது வீட்டில் இருந்து சமூக ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், ‘சுனில் வேகமும், திறனும் அப்படியே உள்ளது. அவர் அணியின் மதிப்புமிக்க வீரர். அவர் அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு உந்துசக்தியாகவும், நேர்மறையான நம்பிக்கை தரும் வழிகாட்டியாகவும் விளங்குகிறார். அவரால் இளம் வீரர்கள் உற்சாகம் அடைகிறார்கள்’ என்று கூறியுள்ளார். இகோர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு இந்திய அணியின் ஆடும் முறையும், வேகமும் மாறியுள்ளது. அவர் 1998ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியில் வெண்கலம் வென்ற குரோஷிய அணிக்காக விளையாடியவர்.இகோர் வரவேற்பு: இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் கால்பந்து போட்டிகளான ஐஎஸ்எல், ஐலீக் போட்டிகளில் வெளிநாட்டு வீரர்களை பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். அதன் மூலம் இந்திய வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைப்பதுடன் இந்திய அணிக்கு திறமையான வீரர்கள் கிடைப்பார்கள்’ என்று பயிற்சியாளர் பதவி ஏற்றது முதல் இகோர் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் இந்திய கால்பந்து கூட்டமைப்பு சமீபத்தில்  வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கையை 4 ஆக குறைக்கப் போவதாக அறிவித்துள்ளது. இந்த முடிவை வரவேற்றுள்ள இகோர், ‘கூட்டமைப்பின் இந்த முடிவால் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். மற்ற ஆசிய நாடுகளுக்கு இணையாக நாம் வேகமடைவதற்கான ஒரே வழி இதுதான்’ என்று கூறியுள்ளார்.

மூலக்கதை