குவைத்தில் புதிய மசோதாவுக்கு அனுமதி 8 லட்சம் இந்தியர்களை திருப்பி அனுப்புகிறது: கொரோனா, கச்சா எண்ணெய் விலை சரிவால் பாதிப்பு

தினகரன்  தினகரன்
குவைத்தில் புதிய மசோதாவுக்கு அனுமதி 8 லட்சம் இந்தியர்களை திருப்பி அனுப்புகிறது: கொரோனா, கச்சா எண்ணெய் விலை சரிவால் பாதிப்பு

துபாய்: உலக பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ், வளைகுடா நாடுகளையும் விட்டு வைக்கவில்லை. கடந்த சில மாதங்களாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக, குவைத் அரசு தனது நாட்டில் உள்ள வெளிநாட்டு தொழிலாளர்களை திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளது. குவைத்தில் சமீபகாலமாகவே வெளிநாட்டினருக்கு எதிரான மனநிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வெளிநாட்டு தொழிலாளர்கள் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் குடியேற்ற ஒதுக்கீடு வரைவு மசோதா கொண்டுவரப்பட்டது. இந்த மசோதாவுக்கு குவைத்தின் தேசிய நடாளுமன்ற சட்ட கமிட்டி தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவின்படி குவைத்தின் மக்கள் தொகையில் 15 சதவீதம் இந்தியர்கள் மட்டுமே வசிக்க வேண்டும். இந்த மசோதா நிறைவேறினால், குவைத்திலிருந்து கிட்டத்தட்ட 8 லட்சம் இந்தியர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற வேண்டிய சூழல் ஏற்படும். முதல் ஆண்டில் வெளிநாட்டவர் எண்ணிக்கையை 70 சதவீதமாகவும், அடுத்த ஆண்டில் 65 சதவீதமாகவும் என படிப்படியாக குறைக்கப்படும் என குவைத் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா குறித்து குவைத்தில் உள்ள இந்தியத்தூதரகம் தரப்பில் எந்தவிதமான கருத்தும் இல்லை. * இந்தியர்கள் எத்தனை பேர்?குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் அளித்த புள்ளிவிவரத்தின்படி, அங்கு 28 ஆயிரம் இந்தியர்கள் குவைத் அரசு பணிகளில், அதாவது நர்ஸ்களாகவும், அங்குள்ள தேசிய எண்ணெய் நிறுவன பொறியாளர்களாகவும் பணியாற்றுகின்றனர். 5.23 லட்சம் பேர் தனியார் நிறுவன தொழிலாளர்கள். 1.16 லட்சம் பேர் அங்கு பணியாற்றும் இந்தியர்களை சார்ந்த குடும்பத்தினர்களாக உள்ளனர். 60,000 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். வெளிநாட்டிலிருந்து சொந்த நாட்டிற்கு இந்தியர்கள் பணம் அனுப்பும் நாடுகளில் முதலிடத்தில் குவைத் உள்ளது. அங்கிருந்து ஆண்டுக்கு சுமார் ரூ.36,000 கோடி அனுப்பி வைக்கப்படுகிறது.

மூலக்கதை