ஆஸ்திரேலியாவில் 100 ஆண்டில் முதன்முறையாக விக்டோரியா எல்லை மூடல்

தினகரன்  தினகரன்
ஆஸ்திரேலியாவில் 100 ஆண்டில் முதன்முறையாக விக்டோரியா எல்லை மூடல்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் மீண்டும் கொரோனா பரவல் ஆரம்பித்துள்ளதால் 100 ஆண்டில் முதல் முறையாக விக்டோரியா மாகாண எல்லை மூடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும், மிக விரைவிலேயே கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக, விக்டோரியா மாகாணத்தில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 127 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். 2 பேர் பலியாகி உள்ளனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விக்டோரியா  நியூ சவுத் வேல்ஸ் மாகாண எல்லை மூடப்பட்டுள்ளது. நியூசவுத் வேல்ஸ் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணம் என்பதால் நோய் பரவலை கட்டுப்படுத்த இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மெல்போர்னில் சில பகுதிகளில் கடுமையான ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியில் கூட வரக்கூடாது. 24 மணி நேரமும் அப்பகுதியில் போலீசார் ரோந்து சென்று வருகின்றனர். விக்டோரியா-நியூசவுத் வேல்ஸ் எல்லை மூடப்படுவது 100 ஆண்டில் இதுவே முதல் முறை. இதற்கு முன்,1919ம் ஆண்டில் ஸ்பானிஷ் ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவியபோது இரு மாநில எல்லைகள் மூடப்பட்டன. இதுவரை ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 8,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 109 பேர் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை