கடைகளும் இல்லை; வாங்கவும் ஆளில்லை தங்கம் இறக்குமதி 86% சரிவு

தினகரன்  தினகரன்
கடைகளும் இல்லை; வாங்கவும் ஆளில்லை தங்கம் இறக்குமதி 86% சரிவு

புதுடெல்லி: கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதன் எதிரொலியாக தங்கம் இறக்குமதியானது கடந்த ஜூனில் கடுமையாக சரிந்துள்ளது. கடந்த மார்ச் இறுதி வாரத்தில் இருந்து நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது. சில தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. என்றபோதிலும் இன்னும் நகை கடைகள் முழுமையாக செயல்பட தொடங்கவில்லை. மக்கள் வேலையின்றி வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இதனால் தங்கம் வாங்குவதற்கான சாதகமான சூழலும் இப்போது இல்லை. இவற்றின் எதிரொலி காரணமாக கடந்த மாதத்தில் தங்கம் இறக்குமதியானது 86 சதவீதம் சரிந்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் இந்தியா, 11 டன் தங்கத்தை மட்டுமே இறக்குமதி செய்துள்ளது. இது, கடந்தாண்டு ஜூனில்  77.7 டன்னாக இருந்தது. இதனுடன் ஒப்பிடுகையில், கடந்த ஜூனில் தங்கம் இறக்குமதி அளவு 86 சதவீதம் சரிந்துள்ளது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் விமானங்கள் சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. சென்னை, டெல்லி, மும்பை ஆகிய 3 நகரங்களில் தங்கத்தின் தேவை அதிகம் இருக்கும் ஆனால், கொரோனா நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக வாடிக்கையாளர்கள் நகைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை. கடைகளை மாத கணக்கில் பூட்டி வைத்தல் மற்றும் விற்பனை இல்லாததன் காரணமாக நகை வியாபாரிகளும் புதிதாக கொள்முதல் செய்யவில்லை. அடுத்த இரண்டு மாதங்களுக்கும் தங்கத்தின் தேவை மிகவும் குறைவாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூலையில் தங்கம் இறக்குமதி 39.7 டன்னாக இருந்தது.

மூலக்கதை