பாக்., சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா

தினமலர்  தினமலர்
பாக்., சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சர் ஜாபர் மிர்சாவுக்கு இன்று (ஜூலை 6) கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி, 2 லட்சத்து 31 ஆயிரத்து 818 பேர் ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 4,762 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைந்த போதிலும், தினமும் புதிதாக கொரோனா தொற்றுக்கு 4 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


கடந்த வெள்ளியன்று, வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷிக்கு கொரோனா தொற்று உறுதியானது. ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத், கீழ்சபை சபாநாயகர் ஆசாத் கைசர் உள்பட ஏராளமான பாக்.,அரசியல்வாதிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பாக்.,சுகாதாரத்துறை அமைச்சர் ஜாபர் மிர்சா தனது டுவிட்டரில், 'இன்று எனக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. மருத்துவ ஆலோசனைப்படி, எனது வீட்டில் என்னை நானே தனிமைப்படுத்தி கொண்டேன். எனக்கு லேசான அறிகுறி இருந்தது. எனக்காக நீங்கள் அனைவரும் வேண்டி கொள்ளுங்கள்' என பதிவிட்டுள்ளார்.

லாகூரில் 48 டாக்டர்கள் ராஜினாமா :

கொரோனா தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட லாகூரில் பணியாற்றி வந்த 48 டாக்டர்கள் தங்களது ராஜினாமா செய்துள்ளனர்.சுகாதார அமைப்பில் காணப்படும் மோசமான பணிச்சூழல் காரணமாக ராஜினாமா செய்துள்ளதாக இளம் டாக்டர் சங்கத்தின் தலைவர் சல்மான் ஹசீப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் மருத்துவர்கள் அதிகம் தேவைப்படும் இந்த முக்கியமான நேரத்தில் மருத்துவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக ராஜினாமாக்களை ஏற்றுக்கொள்வதாக அரசு அறிவித்துள்ளது. இது கொரோனா தொற்றை எதிர்கொள்வதில் அரசு தீவிரமாக செயல்படவில்லை என்பதை காட்டுவதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


டாக்டர்களுக்கு மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் போதுமான அளவில் இருப்பதாகவும், கூடுதலாக பணியாற்றியதற்கு போனஸ் வழங்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக தான் டாக்டர்கள் ராஜினாமா செய்துள்ளதாக பஞ்சாப் மாநில சுகாதாரத்துறை செய்தி தொடர்பாளர் சையத் ஹம்மத் ராசா கூறியுள்ளார்.

மூலக்கதை