குவைத்தில் இருந்து 8 லட்சம் இந்தியர்கள் வெளியேற்றப்படும் அபாயம்

தினமலர்  தினமலர்
குவைத்தில் இருந்து 8 லட்சம் இந்தியர்கள் வெளியேற்றப்படும் அபாயம்

குவைத் சிட்டி: வெளிநாடு வாழ் மக்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், குவைத் அரசு, ''குடியேற்ற ஒதுக்கீடு வரைவு'' மசோதாவை பார்லிமென்டில் நிறைவேற்றியுள்ளது. இதனால், அங்கு வசிக்கும் இந்தியர்களில் 8 லட்சம் பேர், அங்கிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

குவைத்தில் மொத்த மக்கள் தொகை 43 லட்சம் ஆகும். 30 லட்சம் பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். அதில், 12 லட்சம் பேர் இந்தியர்கள். கடந்த சில மாதங்களாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவு, கொரோனா வைரஸ் பாதிப்பு போன்றவற்றால், நிறுவனங்களுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது. ஏராளமான வெளிநாட்டவர்கள் வேலையை இழந்தனர். சமீபத்தில், குவைத் பிரதமர் ஷேக் ஷபாபி அல் காலித் அல் ஷபாப் கூறுகையில், குவைத்தில் வசிக்கும் வெளிநாட்டினரின் எண்ணிக்கையை 70 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக குறைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அங்கு வெளிநாட்டினர் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், கொண்டு வரப்பட்ட '' குடியேற்ற ஒதுக்கீடு வரைவு '' மசோதாவுக்கு, குவைத் பார்லிமென்ட் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா உயர்மட்டக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு விவாதத்திற்கு பின் நிறைவேற்றப்படும். இந்த மசோதாவின்படி குவைத்தில் 15 சதவீதம் இந்தியர்கள் மட்டுமே வசிக்க வகை செய்யப்பட்டுள்ளது. இதனால், 8 லட்சம் பேர் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இது அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தின்படி, குவைத் அரசில், நர்சுகள், எண்ணெய் நிறுவனங்களில் பொறியாளர்கள் மற்றும் சில விஞ்ஞானிகள் என 28 ஆயிரம் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். 5.23 பேர் தனியார் துறைகளில் பணியாற்றுகின்றனர். அவர்களை சார்ந்த 1.16 லட்சம் பேர் உள்ளனர். அங்குள்ள 23 இந்திய பள்ளிகளில் 60 ஆயிரம் பேர் படித்து வருகின்றனர்.

அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலை தரவுகளின்படி குவைத்தில் மட்டும் 49 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் பெரும்பாலானோர், வெளிநாட்டு தொழிலாளர்கள் ஆவார்கள்.

மூலக்கதை