ஊரடங்கு தளர்வுக்கு பின் எப்படி இருக்குது லண்டன்

தினமலர்  தினமலர்
ஊரடங்கு தளர்வுக்கு பின் எப்படி இருக்குது லண்டன்

லண்டன்: உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்றுக்கு பல நாடுகளும் சிக்கித்தவிக்கின்றன. இங்கிலாந்தில் இதுவரை 2.85 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே, ஜூலை 4ம் தேதி முதல் விடுதிகள், உணவகங்கள், சினிமா தியேட்டர்கள், சலூன்கள், பார்கள், ஜிம்கள், விளையாட்ட மைதானங்கள், அருங்காட்சியகங்கள், நூலகங்களை திறக்க பிரிட்டன் அரசு அனுமதி அளித்தது. ஆனாலும், 6 பேருக்கு மேல் கூட்டமாக கூட தடை விதிக்கப்பட்டன.

தளர்வுகள் கொடுத்தாலும், மக்கள் தங்கள் உடல்நலம், பாதுகாப்பிற்காக கட்டுப்பாடுகளை பின்பற்றவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டனர். கிட்டத்தட்ட மூன்றரை மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்டதால், மக்கள் கட்டுப்பாடுகள், விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு, சமூக இடைவெளியின்றி கூட்டம் கூட்டமாக கூடியதால், மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தளர்வுகள் அறிவிக்கப்பட்ட முதல் நாள் இரவில் லண்டனில் புகழ்பெற்ற இடமான சோஹோவில் மக்கள் பெருமளவு கூடி, மாஸ்க் அணியாமல், சமூக இடைவெளியின்றி மது அருந்தி நடனமாடினர்.

இது குறித்து அங்குள்ள ஒரு கடை மேலாளரான ரபால் லிஸ்ஜெவ்ஸ்கி என்பவர் கூறுகையில், ‛கட்டுப்பாடுகளை மீறி இரவு 8 மணியளவில் மக்கள் பலர் ஒன்றுக்கூடி விருந்து நிகழ்ச்சி போல மதுவுடன் நடனமாடினர். யாரும் மாஸ்க் அணியவில்லை, சமூக இடைவெளியை மதிக்கவில்லை. ஒரு தெருவில் இவ்வளவு பேர் ஒன்றுக்கூடினால் சமூக இடைவெளி சாத்தியமில்லாமல் போகும்,' எனக் கவலை தெரிவித்தார்.

போலீஸ் அதிகாரி கூறுகையில், ‛பெரும்பான்மையான பொதுமக்கள் சமூக இடைவெளி வழிமுறைகளை பின்பற்றி விழிப்புடன் இருந்தனர். சில பகுதிகள் குறிப்பாக சோஹோ மற்றும் போர்டோபெல்லோ சாலை போன்ற பகுதிகளில் மட்டும் மக்கள் கூட்டம் கூடினர். லண்டனில் குறிப்பிடத்தக்க பிரச்னைகள் அல்லது சம்பவங்கள் எதுவும் இல்லை என்பதால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,' என்றார்.

லண்டனில் உள்ள பல இடங்களில் மக்கள் பெருந்திரளாக கூடி மதுபான விடுதிகளில் அருகருகே அமர்ந்து மது அருந்தும் ஏராளமான போட்டோக்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது.

இது குறித்து இங்கிலாந்தின் போலீஸ் கூட்டமைப்பின் தேசியத் தலைவர் ஜான் ஆப்டர் கூறியதாவது: மது அருந்தி வருபவர்களால் நிச்சயம் சமூக இடைவெளியை பின்பற்ற முடியாது. அவர்கள் அவ்வாறு பின்பற்ற மாட்டார்கள் என்பதும் தெளிவாக தெரிகிறது. இரவு முழுவதும் பரபரப்பாக அமைந்தது. போலீஸ் அதிகாரிகள் முடிந்தவரை திறன்பட சமாளித்தனர். சில பகுதிகளில் போலீசார் மீது தாக்குதலும் நடந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை