இன்னும் ஒரு வருடத்திற்கு மாஸ்க்தான்....! பொது இடங்களில் கூட்டம் கூடாது; கேரள அரசு அதிரடி

தினகரன்  தினகரன்
இன்னும் ஒரு வருடத்திற்கு மாஸ்க்தான்....! பொது இடங்களில் கூட்டம் கூடாது; கேரள அரசு அதிரடி

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த ஓர் ஆண்டுக்கு பொது இடங்களில் கூட்டம் கூடுவதற்கு மாநில அரசு தடை  விதித்துள்ளது. சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கேரள மாநிலத்தில்தான், கடந்த ஜனவரி 29 ஆம் தேதி முதன்முதலாக கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. உடனே விழித்துக் கொண்ட அந்த மாநில அரசு, பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சைகளை துரித கதியில் மேற்கொண்டது. இதன் பயனாக, கொரோனா தொற்று பட்டியலில் டாப் 5 இடத்தில் கேரளா, மளமளவென கீழிறங்கியது. தற்போது அங்கு மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கையை தொடரும் அளவுக்கு நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டது. இருப்பினும் மத்திய அரசு அறிவித்துள்ள தளர்வுகள், கட்டுப்பாடுகள் கேரளாவில் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருவதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 225 பேருக்கு கொரோனா இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டது. கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5,429 ஆக உயர்ந்துள்ளது.  வெளிநாடுகளில் இருந்து வந்த 117, வெளிமாநிலங்களில் இருந்த வந்த 57 பேர் உள்பட 225 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பு நடைமுறைகள், விதிமுறைகள் இன்னும் ஒராண்டுக்கு அமலில் இருக்கும் என்று கேரள அரசு இன்று அதிரடியாக அறிவித்துள்ளது. குறிப்பாக, பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட கொரோனா பரவல் தடுப்பு நடைமுறைகள் தொடர்ந்து ஓராண்டுக்கு அமலில் இருக்கும் என்று கேரள மாநில அரசு இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.

மூலக்கதை