இந்தியாவை நேசிக்கிறோம் அதிபர் டிரம்ப் உருக்கம்

தினமலர்  தினமலர்
இந்தியாவை நேசிக்கிறோம் அதிபர் டிரம்ப் உருக்கம்

வாஷிங்டன்: 'நன்றி நண்பரே... இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது' என, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அனுப்பியுள்ள தகவல், சமூக வலைதளங்களில் அனைவரைது வரவேற்பையும் பெற்றுள்ளது.

அமெரிக்காவின், 13 மாகாணங்கள், 1776 ஜூலை, 4ல், பிரிட்டன் ஆட்சியிலிருந்து சுதந்திரம் அடைந்தன. இந்த நாள், ஆண்டு தோறும் அமெரிக்காவின் சுதந்திர தினமாக கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவின், 244வது சுதந்திர தினம், நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு, பிரதமர் மோடி அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், 'சுதந்திர தினத்தை கொண்டாடும் அதிபர் டிரம்பிற்கும், அமெரிக்க மக்களுக்கும் வாழ்த்துகள். 'உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளான அமெரிக்காவும், இந்தியாவும், சுதந்திரத்தையும், மனிதத்தையும் போற்றுவதில் சிறந்து விளங்குகின்றன' என, தெரிவித்திருந்தார்.

இதற்கு நன்றி தெரிவித்து, அதிபர் டிரம்ப், பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள செய்தியில், 'உங்கள் வாழ்த்துக்கு நன்றி நண்பரே... இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது' என, தெரிவித்துள்ளார்.

இரு நாட்டு தலைவர்களுக்கு இடையேயான இந்த நெகிழ்ச்சியான வாழ்த்து பரிமாற்றத்துக்கு, பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்துஉள்ளனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்துக்கு, டிரம்பிற்கு நிதி திரட்டும், இந்திய - அமெரிக்க குழுவின் துணை தலைவர் அல் மசோன் கூறுகையில், ''உலகின் மிகப் பெரிய இரு ஜனநாயக நாடுகளின் தலைவர்களுக்கு இடையே உள்ள நெருக்கமான நட்பு, இந்த வாழ்த்து பரிமாற்றம் வாயிலாக சர்வதேச சமுதாயத்துக்கு தெரிய வந்துஉள்ளது,'' என்றார்.

மூலக்கதை