லண்டனில் 'பப்'பில் கூட்டம்; அங்கேயும் இதே கதை தான்..

தினமலர்  தினமலர்
லண்டனில் பப்பில் கூட்டம்; அங்கேயும் இதே கதை தான்..

லண்டன்: லண்டனில் உரிமம் பெறாத இசை நிகழ்ச்சியில் கூட்டத்தை கலைக்க சென்ற போலீசார் மீது நடந்த தாக்குதலில் 7 போலீசார் காயமடைந்தனர்.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்றுக்கு பல நாடுகளும் சிக்கித்தவிக்கின்றன. ஐரோப்பாவில் மிக மோசமான பாதிப்புக்கு உள்ளான நாடாக இங்கிலாந்து உள்ளது. இங்கு இதுவரை 2.85 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இருப்பினும், கடந்த ஜூலை 4ம் தேதி முதல் மதுபான கடைகள், பார்கள் போன்றவற்றை திறக்கு பிரிட்டன் பிரதமர் அனுமதி அளித்ததார். மேலும், மக்கள் தங்கள் உடல்நலம், பாதுகாப்பிற்காக கட்டுப்பாடுகளை பின்பற்றவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டனர்.

கிட்டத்தட்ட மூன்றரை மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட இங்கிலாந்து விடுதிகள் மற்றும் உணவகங்களில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நிகழ்ச்சிகள், கூட்டங்களில் அதிகபட்சம் ஆறு பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், லண்டனில் உரிமம் பெறாத இசை நிகழ்ச்சியில் கூட்டத்தை கலைக்க சென்ற போலீசார் மீது தாக்குதல் நடந்துள்ளது. கடந்த 4ம் தேதி லண்டனில் உள்ள ஹேவ்லாக் க்ளோஸில் உரிமம் பெறாமல் இசை நிகழ்ச்சி நடப்பதாகவும், விதிமுறைகளை மீறி கூட்டம் கூடியதாகவும் கூறப்படுகிறது.

இதனால், கொரோனா பரவும் அபாயம் இருந்ததால், நிகழ்ச்சியின் உள்ளே சென்ற போலீசார் கூட்டத்தினர் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். மாறாக, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், செங்கல் மற்றும் பிற ஆயுதங்களால் போலீசாரை தாக்கினர். இதில் நடந்த வன்முறையில் 7 போலீசார் காயமடைந்தனர். ஆனாலும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. கூட்டத்தினர் அதிகாலை 1.15 மணிக்கே கலைந்து சென்றதாக கூறப்படுகிறது.

கடந்த இரண்டு வாரங்களாக லண்டனில் இதுபோன்ற சட்டவிரோத கூட்டங்கள் நடைபெறுவதும், அதில் வன்முறை நிகழ்வதும் தொடர்கிறது. கடந்த வாரம், பிரிக்ஸ்டன் மாவட்டத்தில் ஒரு விருந்து நிகழ்ச்சியில் ஏற்பட்ட மோதல்களில் 22 போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர். மேற்கு லண்டனில் நாட்டிங் ஹில்லில் நடந்த ஒரு கூட்டத்திலும் வன்முறை வெடித்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவலை தடுக்க எவ்வளவோ கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் போடப்பட்டாலும், சட்டவிரோதமாக கூட்டம் கூடுவது மட்டுமல்லாமல் கலைக்க முற்பட்ட போலீசார் மீதே தாக்குதல் நடப்பது லண்டனில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

மூலக்கதை