கடமை உணர்ந்தனர்! முழு ஊரடங்கை, மக்கள் முழுமையாக பின்பற்றினர்

தினமலர்  தினமலர்
கடமை உணர்ந்தனர்! முழு ஊரடங்கை, மக்கள் முழுமையாக பின்பற்றினர்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, நேற்று அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட, முழு ஊரடங்கை, மக்கள் முழுமையாக பின்பற்றினர்.ஊத்துக்குளி ரோடு உள்ளிட்ட இடங்களில், வழக்கமாக இரவு, 10:00 மணிக்கு வியாபாரத்தை முடிக்கும் இறைச்சி வியாபாரிகள், நேற்று முன்தினம் இரவு, ஒரு மணி நேரம் கூடுதலாகவே வியாபாரத்தை கவனித்தனர். அசைவப்பிரியர்கள் அசராமல் நின்று வாங்கிச் சென்றனர்.
நேற்று காலை, 6:00 மணிக்கு எம்.எஸ்., நகரில், மூன்று கோழி, ஒரு மீன்கடைகாரர்கள், அரை ஷட்டர் திறந்த நிலையில், பார்சல் விற்பனையில் பிசியாகினர். காட்டன் மில் ரோடு, பாப்பாநகர், விநாயகர் கோவில் எதிரில் உள்ள கோழிக்கடையிலும் விற்பனை களைகட்டியது.அதேநேரம், பிச்சம்பாளையம், போயம்பாளையம், புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ரோட்டில் வைத்து டீ விற்றவர்களை பணிக்கு வந்த போலீசார் விரட்டினர். காலை, 7:30 மணி வரை, மக்கள் வெளியே சுற்றினர்; முக்கிய சந்திப்பு, வீதிகளில் மக்கள் சகஜமாக வந்து சென்றனர்.ஞாயிறு விடுமுறையில் அதிக மக்கள் வந்து செல்லும், தென்னம்பாளையம் மார்க்கெட், மீன் மார்க்கெட், உழவர் சந்தை, பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே இருந்த தினசரி மார்க்கெட் கடைகள், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செயல்படும் பூ மார்க்கெட் ஆகியவை மூடப்பட்டிருந்ததால், வெறிச்சோடின. அவிநாசி ரோடு, தாராபுரம் ரோட்டில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.காலை, 8:00 மணிக்கு, முக்கிய சந்திப்பு, சாலை, சிக்னல்களில் போலீசார் பணிக்கு வந்தனர். டூவீலரில் சுற்றித்திரிந்தவர்களை எச்சரித்து அனுப்பினர். மாநகராட்சி அலுவலக சிக்னல் சந்திப்பு, காமராஜர் ரோடு, புஷ்பா ரவுண்டானா பகுதியில் கண்காணிப்பு தீவிரமடைந்தது. காங்கயம் ரோடு, ஊத்துக்குளி ரோட்டில் மண்ணரை சோதனை சாவடியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
போலீசாரின் கண்காணிப்பு துவங்கியதும், மக்கம் நடமாட்டம் குறைந்தது. வீதி, ரோடுகள் வெறிச்சோடின.பெட்டிக்கடை முதல் டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் உள்ளிட்ட எந்த வணிக நிறுவனங்களும் திறக்கப்படவில்லை;தொழிற்சாலை, அலுவலகங்கள் இயங்கவில்லை. வாகன போக்குவரத்து முற்றிலும் இல்லை.
இதனால், பரபரப்பான திருப்பூர் நகர ரோடுகள் வெறிச்சோடின.ஊரக பகுதியும் 'வெறிச்'அவிநாசி, பல்லடம், பொங்கலுார், வெள்ளகோவில் உள்ளிட்ட ஊரக பகுதிகளில் உள்ள கிராமப்புறங்களில், காலை நேரங்களில் மக்கள் நடமாட்டம் தென்பட்ட போதிலும், பிறகு, வெறிச்சோடியது. அவிநாசி ராமநாதபுரம் பகுதியில், இறைச்சி விற்பனையில் சிலர் ஈடுபட்டனர். பல்லடத்தில், பஸ் ஸ்டாண்ட், நால் ரோடு சிக்னல், பனப்பாளையம், என்.ஜி.ஆர்., ரோடு, அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வெறிச்சோடின. ஒரு சில வெளிமாநில வாகனங்கள் மட்டுமே என்.எச்.,ரோடு வழியாக வந்து சென்றன. காரணமின்றி பயணித்த வாகன ஓட்டிகளுக்கு, போலீசார் அபராதம் விதித்தனர்.
வீதிகள் சுத்தமாச்சு
நேற்று முழு ஊரடங்கால், நகர வீதிகள் வெறிச்சோடின. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பிரதான ரோடுகள், மருத்துவமனை உள்ளிட்ட, பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில், வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.மாநகராட்சி கமிஷனர் சிவகுமார் கூறுகையில், ''ஊரடங்கு விதி பின்பற்றுவது, முக கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், சானிடைசர் பயன்படுத்துதல் உள்ளிட்ட அரசின் பாதுகாப்பு அறிவுரைகளை பின்பற்றினாலே, நோய் தொற்றில் இருந்து தப்பிக்க முடியும்,'' என்றார்.
- நமது நிருபர் குழு -

மூலக்கதை