ஏற்பாடு! சத்துணவு மாணவர்களுக்கு அரிசி வழங்க...கடலூர் மாவட்டத்தில் 1,61,288 பேர் பயனடைவர்

தினமலர்  தினமலர்
ஏற்பாடு! சத்துணவு மாணவர்களுக்கு அரிசி வழங்க...கடலூர் மாவட்டத்தில் 1,61,288 பேர் பயனடைவர்

கடலுார், : கடலுார் மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உ ள்ளதால், அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் சத்துணவு சாப்பிட்டு வந்த 1,61,288 மாணவ, மாணவியருக்கு அரிசி, பருப்பை நேரடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், பள்ளி, கல்லுாரிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியர் உணவுக்கு வழியின்றி சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் மாணவ, மாணவியருக்கு அரிசி, பருப்பை நேரடியாக வழங்க தமிழக அரசு முடிவு செய்து, அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடலுார் மாவட்டத்தில் 1,585 மையங்களில் சத்துணவு வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் 24,144 பேர், ஆதி திராவிடர் பள்ளிகளில் 7,803 பேர், அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 26,411 பேர் என 1,61,288 பேர் சத்துணவு திட்டத்தில் பயன்பெறுகின்றனர்.இவர்களுக்கு அரசு உத்தரவின்படி, அரிசி, பருப்பு நேரடியாக வழங்க சமூக நலத்துறை சார்பில், ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் 'கடலுார் மாவட்டத்தில் சத்துணவு திட்டத்தில் 1,61,288 மாணவ, மாணவியர் பயன் பெறுகின்றனர்.

இவர்களுக்கு மே மாதத்திற்கான அரிசி, பருப்பு நேரடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, முதன்மைக் கல்வி அலுவலகத்திடம் எந்தெந்த தேதியில் எந்தெந்த மையங்களில் எந்த வகுப்பு மாணவர்களுக்கு பொருட்களை வழங்க வேண்டும் என விவரங்கள் கேட்டு பெறப்படும்.அதன்பிறகு சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மூலமாக டோக்கன் விநியோகம் செய்யப்படும்.குறிப்பிட்ட தேதியில் தனிமனித சமூக இடைவெளியுடன் சத்துணவு பொறுப்பாளர்கள் டோக்கனை பெற்றுக் கொண்டு மாணவர்களுக்கு விரைவில் பொருட்களை வழங்குவார்கள்.

மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்பேரில் மாணவர்களின் வீட்டிற்கு சென்று பொருட்களை வழங்குவதா அல்லது பள்ளிக்கு வரவழைத்து கொடுப்பதா என்பது குறித்து முடிவு செய்யப்படும்' என்றார்.

மூலக்கதை