துவக்கம்! கைதிகளை விசாரிக்க சிறப்பு மையம்...போலீஸ் தலைமையகம் நடவடிக்கை

தினமலர்  தினமலர்
துவக்கம்! கைதிகளை விசாரிக்க சிறப்பு மையம்...போலீஸ் தலைமையகம் நடவடிக்கை

புதுச்சேரி : விசாரணை கைதிகளால் போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்படாதவாறு தடுப்பு காவல் மற்றும் பாதுகாப்பு மையம் ஏற்படுத்த போலீஸ் தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குற்ற வழக்குகளில் சிக்கும் குற்றவாளிகள் மூலம் போலீசாருக்கு கொரோனா தொற்று பரவுவதால், போலீஸ் ஸ்டேஷன்கள் மூடப்படுகிறது. அங்கு பணிபுரியும் போலீசார் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் கொரோனோ மற்றும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதில் சிரமமாக உள்ளது. போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்படுவதை தடுத்திட, புதுச்சேரியில் 2, காரைக்கால், ஏனாம் மற்றும் மாகிகளில் தலா ஒரு தடுப்பு காவல் மற்றும் பாதுகாப்பு மையம் ஏற்படுத்த போலீஸ் தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கான இடங்களை அந்தந்த பகுதி எஸ்.எஸ்.பி.,க்கள் மற்றும் எஸ்.பி.,க்கள் தேர்வு செய்ய வேண்டும். இந்த மையத்தில், சிறையில் உள்ளதுபோல் லாக் அப் வசதி, ஆண்-பெண் இருபாலருக்கும் தனித்தனி கழிப்பறை வசதி, தடையில்லா மின்சார வசதி இருக்க வேண்டும். மையத்தின் நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் வழியில் சி.சி.டி.வி., பொருத்த வேண்டும். பொது நாட்குறிப்பு பராமரிக்க வேண்டும். வீடியோ கான்பிரன்ஸ் மற்றும் சிறையில் உள்ளது போல் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்திட வேண்டும்.

தடுப்புக் காவல் மையங்களில் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில், ஐ.ஆர்.பி.என். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். புதுச்சேரி மையங்களுக்கு, தெற்கு எஸ்.பி., பொறுப்பு அதிகாரியாகவும், சட்டம் ஒழுங்கு எஸ்.பி., ரீடர் மேற்பார்வை அதிகாரியாகவும் செயல்படுவர். காரைக்கால், ஏனாம் மற்றும் மாகி பகுதி மையங்களுக்கு அந்தந்த பகுதி எஸ்.பி.,க்கள் பொறுப்பு அதிகாரிகளாக இருப்பர்.ஜாமீனில் வெளியே வராத குற்றங்களில் சிக்குபவர்களை, தடுப்பு காவல் மையத்தில் வைத்து விசாரணை மற்றும் மருத்துவ பரிசோதனை செய்த பின், கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும்.

பரிசோதனையில் கைதிக்கு கொரோனா தொற்று இருந்தால், உடன் அவரை மருத்துவ மனையில் சேர்க்க வேண்டும். அவருடன் பணியில் இருந்த போலீசார் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.கைது செய்வது எப்படி ஒருவரை கைது செய்யும் சூழல் வரும்போது குறைந்த எண்ணிக்கையிலான போலீசாரை கொண்டே கைது செய்ய செல்ல வேண்டும். முழு உடல் கவசம் அணிந்து கொண்ட பிறகே கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபடவேண்டும். முடிந்தவரை கைது செய்பவர்களை தொடக்கூடாது.

மூலக்கதை