விற்பனை இன்று துவக்கம் தங்க பத்திரம் வெளியீடு கிராம் ரூ.4,852 என நிர்ணயம்

தினகரன்  தினகரன்
விற்பனை இன்று துவக்கம் தங்க பத்திரம் வெளியீடு கிராம் ரூ.4,852 என நிர்ணயம்

புதுடில்லி: நடப்பு நிதியாண்டுக்கான  தங்கப் பத்திரத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ஒரு கிராம் ரூ.4,852 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பத்திரங்கள் இன்று முதல் விற்பனைக்கு வர உள்ளன. மக்களுக்கு தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்கும் வகையில் தங்க பத்திரம் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. ஒருவர் ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ஒரு கிராம் முதல் 4 கிலோ தங்கம் வரை முதலீடு செய்யலாம். அறக்கட்டளையாக இருந்தால் 20 கிலோ வரை முதலீடு செய்ய முடியும். இந்த பத்திரங்கள் சிறு நிதி வங்கிகள் மற்றும் பேமெண்ட் வங்கிகள் தவிர சில வங்கிகளில் விற்பனை செய்யப்படும். மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தைகள் மற்றும் அஞ்சலகங்களில் வாங்கலாம்.நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் 20ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் வரை 6 பத்திரங்களை மத்திய அரசு வெளியிடும் என்று ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்திய நகைக்கடை விற்பனையாளர்கள் சங்கம் முந்திய வாரம் நிர்ணயித்த விலையின் அடிப்படையில் தங்கத்தின் விலை ரிசர்வ் வங்கியால் முடிவு செய்யப்படுகிறது. 999 சுத்தத் தங்கமாக இந்த பத்திரம் இருக்கும். நடப்பு நிதியாண்டுக்கான நான்காவதாக பத்திரத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்தப் பத்திரம் ரூ.4,852 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் முறையில் பணம் செலுத்தி வாங்கினால் கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும். எனவே ஆன்லைனில் வாங்குபவர்களுக்கு ஒரு கிராம் ரூ.4,802 மட்டுமே. கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை முதலீடு செய்யத்தக்க வகையில் தங்க பத்திரம் வெளியிடப்பட்டது. அதற்கு ஒரு கிராம் ₹4,677 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருவது தொடர்ந்து பத்திரத்தின் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை