கொரோனா பரவலை மறைத்தது ஏன்? சீனா மீது டிரம்ப் குற்றச்சாட்டு

தினமலர்  தினமலர்
கொரோனா பரவலை மறைத்தது ஏன்? சீனா மீது டிரம்ப் குற்றச்சாட்டு

வாஷிங்டன் : ''கொரோனா வைரஸ் பற்றிய விஷயத்தை சீனா ஆட்சியாளர்கள் மூடி மறைத்து ரகசியம் காத்ததால் தான் தற்போது உலகம் முழுவதும் அது பரவியுள்ளது; இதற்கு சீனா பொறுப்பேற்க வேண்டும்'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியுள்ளார்.

அமெரிக்காவின் 244வது சுதந்திர தினத்தையொட்டி வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் டிரம்ப் பேசியதாவது: கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து தான் மற்ற நாடுகளுக்கு பரவியது. வைரசின் தாக்கம் பற்றிய விஷயம் தெரிந்தும் அதை உடனடியாக மற்ற நாடுகளுக்கு தெரிவிக்காமல் சீனா ஆட்சியாளர்கள் மூடி மறைத்தது. சரியான நேரத்தில் இதை தெரிவித்திருந்தால் தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையை அனைத்து நாடுகளும் மேற்கொண்டிருக்கலாம்.

இந்த விஷயத்தில் உலக நாடுகளை சீனா ஏமாற்றி விட்டது. அதனால் தான் இப்போது கொரோனா வைரஸ் உலகம் முழுதும் பரவி பெரும் உயரிழப்புகளையும் பொருளாதார பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது; இதற்கு சீனா பொறுப்பேற்க வேண்டும். வைரசை கட்டுப்படுத்துவதில் அமெரிக்கா மற்ற நாடுகளுக்கு முன் மாதிரியாக செயல்பட்டு வருகிறது. முகக்கவசம், பாதுகாப்பு உடை செயற்கை சுவாச கருவி போன்றவை சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்பட்டன. தற்போது இவை அமெரிக்காவிலேயே தயாரிக்கப்படுகின்றன.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும் அதை முறியடிப்பதில் நம் மருத்துவர்கள் திறமையுடன் செயல்பட்டு வருகின்றனர். உலகின் மற்ற எந்த நாடுகளையும் விட அமெரிக்காவில் கொரோனாவுக்காக அதிக பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன என்றார்.

மூலக்கதை