ஹாங்காங்கில் அதிகரிக்கும் சீனாவின் அடக்குமுறை; வெகுண்டெழும் மக்கள்

தினமலர்  தினமலர்
ஹாங்காங்கில் அதிகரிக்கும் சீனாவின் அடக்குமுறை; வெகுண்டெழும் மக்கள்

ஹாங்காங்: ஹாங்காங்கை சீனா தன்வசப்படுத்த முயன்று வருகிறது. ஒரு காலத்தில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்த ஹாங்காங் சுதந்திரமாக செயல்பட்டு வந்தது. 'ஒரு நாடு இரு சட்டம்' என ஹாங்காங் மற்றும் சீனா இடையே ஒரு ஒப்பந்தம் இருந்தது.

அதன்படி ஹாங்காங்குக்கு என தனியாக சில சட்ட சுதந்திரங்கள் உண்டு. சீனா ஓரளவுக்கு மட்டுமே ஹாங்காங்கை கட்டுப்படுத்த இயலும். இதனால் அங்கு ஜனநாயக ஆதரவாளர்கள் அதிகமாக இருந்தனர். இவர்களை சீன கம்யூனிச அரசை கட்டுப்படுத்த முடியாது என்ற நிலை இருந்துவந்தது. ஆனால் தற்போது சீனா தைவான், ஹாங்காங் ஆகிய இரு நாடுகளையும் தன் வசமாக்க முயன்று வருகிறது. இதேபோல சீனா திபெத்தையும் ஆக்கிரமிக்க முயன்றது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் சீன நாடாளுமன்றத்தில் சீன கம்யூனிச அரசு ஐந்து அம்ச திட்டத்தை நிறைவேற்ற முடிவெடுத்தது. அதன்படி ஹாங்காங்கை தன் வசமாக்கும் சட்ட திருத்தத்தை கொண்டுவர முடிவெடுத்தது. இதனால் ஹாங்காங்கில் உள்ள ஜனநாயக ஆதரவாளர்கள் போராட்டத்தில் இறங்கினர். அவர்களை சீன காவல்துறை கைதுசெய்து சிறையில் அடைத்தது. இதனை அடுத்து ஹாங்காங்கில் சீனாவுக்கு எதிரான கோஷங்கள், பதாகைகள், ஊர்வலங்கள் ஆங்காங்கே நடைபெற்று வந்தன.

தற்போது ஹாங்காங்கில் வசிக்கும் சீன எதிர்ப்பு வெளிநாட்டவர்களும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொது சேவை செய்யும் தனிநபர்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். சீனாவுக்கு எதிராக இவர்கள் இணையத்தில் கருத்து பதிவிட்டாலோ அல்லது மேடையில் பேசினாலோ கைது செய்யப்படுகின்றனர்.

ஹாங்காங் குடியுரிமை பெற்ற குடிமக்கள் எந்த நாட்டிலிருந்து சீனாவை பற்றி அவதூறு பரப்பினாலும் அவர்கள் அங்கிருந்து உடனடியாக நாடு கடத்தப்பட்டு கைது செய்யப்படுவர் என சீன கம்யூனிச அரசு தெரிவித்துள்ளது. இதற்கான சமீபத்திய உதாரணம் சீனா-ஆஸ்திரேலியா குடிமகனான படியுகாவின் கைது. இவருக்கு சீனா, ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளிலும் குடியுரிமை உள்ளது.

இவர் ஒரு ஓவியர். அவ்வப்போது அரசியல் கருத்துகளை கேலி சித்திரங்களாக வரைந்து பிரசுரித்து வருவர். இவர் அதிரடியாக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இதேபோல கம்யூனிச அரசு இரும்பு கரம் கொண்டு ஹாங்காங்கில் அரசியல் கருத்துக்களை பகிர்வோரை முன்னறிவிப்பு இல்லாமல் கைது செய்து வருகிறது.

இதற்கான தீர்மானத்தையும் கடந்த செவ்வாயன்று சீன நாடாளுமன்றத்தில் கம்யூனிச அரசு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. இதே நிலை நீடித்தால் ஹாங்காங்கில் சுதந்திரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு கம்யூனிச அரசின் சர்வாதிகாரம் அதிகரித்துவிடும். மாற்று கருத்து என்பதை கூறுவோர்மீது கடுமையான சட்டங்கள் பாய்ந்தால் இங்கும் ஒரு ஹிட்லர் ஆட்சி நடைபெறும் என ஹாங்காங் அடிப்படைவாதிகள் வெகுண்டெழுந்து வருகின்றனர்.

மூலக்கதை