மதுரையில் வீட்டு தனிமை நோயாளிகள் அலட்சியம்! கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுமா?

தினமலர்  தினமலர்
மதுரையில் வீட்டு தனிமை நோயாளிகள் அலட்சியம்! கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுமா?

மதுரை: மதுரையில் வீட்டு தனிமையில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகள், குடும்பத்தினர் அலட்சியம் காட்டுவது புதிய சிக்கலை ஏற்படுத்தும். சமூக பொறுப்பை உணர்ந்து வீட்டில் இருக்க வேண்டும். மாநகராட்சி நிர்வாகமும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.

கொரோனாவால் பாதிக்கப்படும் அனைவருக்குமே மருத்துவ சிகிச்சை தேவையில்லை. அறிகுறியில்லாத, மிதமான பாதிப்புள்ளோர் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டால் போதும். அவர்களை தனிமை முகாமில் அனுமதித்து அரசு கண்காணிக்கிறது. வசதி இருந்தால், வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டமும் மதுரையில் துவங்கியுள்ளது. இதுவரை 500க்கும் மேற்பட்டோர் வீட்டுத்தனிமைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் குணமடையும்வரை வீட்டில் தனி அறையில் இருக்க வேண்டும். மாநகராட்சி களப்பணியாளர்கள் இவர்களின் உடல்நிலையை கண்காணிக்கின்றனர். பாதிப்பு தீவிரமானால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், சில நோயாளிகள் விதிகளை மீறி வீடுகளை விட்டு வெளியில் சுற்றுகின்றனர்.

நகரை சேர்ந்த நோயாளி ஒருவர் மனைவியுடன் வெளியில் 'வாக்கிங்' சென்றது சர்ச்சையானது. இது அக்கம் பக்கத்தினருக்கு அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சி களப்பணியாளர்களும் முன்பு போல கண்டுகொள்வதில்லை.

முன்பு ஒரு பாதிப்பு இருந்தால் தெரு மூடப்படும். தற்போது ஒரு தெருவில் மூவர் பாதிக்கப்பட்டால் மட்டுமே அந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நோயாளி வசிக்கும் தெருவில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது.

மாநகராட்சி அதிகாரிகள்கூறுகையில், 'கொரோனாவை ஒழிக்க அரசின் நடவடிக்கை மட்டும் போதாது. வீட்டுத்தனிமை திட்டத்தை நோயாளிகள் முறையாக கடைபிடிக்க வேண்டும். நோயாளியின் குடும்பத்தினர் ஒத்துழைக்க வேண்டும். காய்ச்சல் பாதிப்பு இருந்தால் வீடுகளை மூடும் திட்டம் தற்போது துவங்கப்பட்டுஉள்ளது. மக்கள் வெளியில் வருவது தடுக்கப்படும். இதில் அரசுக்கும் மக்களுக்கும் கூட்டுப்பொறுப்பு உள்ளது,' என்றார்.

மூலக்கதை