மதுரைக்கு தேவை 'முகக்கவச புரட்சி'

தினமலர்  தினமலர்
மதுரைக்கு தேவை முகக்கவச புரட்சி

மதுரை : 'மதுரை நகரம் கொரோனாவை வெல்ல வேண்டுமானால் மக்கள் முகக்கவச புரட்சியில் ஈடுபட வேண்டும்' என அரசு மருத்துவமனை டீன் சங்குமணி தெரிவித்தார்.

மாவட்டத்தில் கொரோனாவால் தினமும் 300 பேர் பாதிக்கப்படுகின்றனர். மக்கள் தொகை அடர்த்தி அதிகம் என்பதால் மொத்த பாதிப்பில் 80 சதவீதம் நகரில் நேர்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசின் நடவடிக்கையை விட மக்களின் ஒத்துழைப்பு தான் அவசியமாகிறது.

குறிப்பாக, பரவல் அதிகமாக உள்ள இச்சூழலில் மாஸ்க் அணிவது அவசியம் என டீன் சங்குமணி அறிவுறுத்தியுள்ளார்.அவர் கூறியதாவது:மதுரை மக்கள் மாஸ்க் அணிவதில் இனி எள் அளவு கூட அலட்சியம் காட்ட கூடாது. பல நாடுகள்பாதிப்பில் இருந்து மீண்டு வர முகக்கவசம் பெருமளவு உதவியுள்ளது.இதை அணிவதால் மக்கள் தங்கள் உயிரை மட்டுமின்றி, தங்களின் குடும்பத்தினர், உறவினர், அண்டை வீட்டார் என அடுத்தவர்களின் உயிரையும் காக்க முடியும். மாஸ்க் அணியாமல் வீட்டு வாசலைக் கூட தாண்டக்கூடாது.

அடுக்குமாடி குடியிருப்புகள், லைன் வீடுகளில் வசிப்பவர்கள் வளாகத்திற்குள் நுழைந்ததும் மாஸ்க்கை கழற்றி விடுகின்றனர். இது தவறான விஷயம். வீட்டிற்குள் குடும்ப உறுப்பினர்களிடம் பேசும்போது கூட அணிந்திருக்க வேண்டும். துாங்கும்போது மட்டும் கழற்றலாம். இதை ஒரு புரட்சியாக கருதி இன்னும் கொஞ்ச காலம் முகக்கவசம் அணிவதை மக்கள் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இதை எவ்வளவு வெற்றிகரமாக மேற்கொள்கிறோமோ, அவ்வளவு வேகமாக கொரோனாவிடம் இருந்து மதுரை மீண்டுவிடும், என்றார்.

மூலக்கதை