அமெரிக்க வரலாற்றை அழிக்க துடிப்பதா?: போராட்டக்காரர்கள் மீது டிரம்ப் பாய்ச்சல்!

தினமலர்  தினமலர்
அமெரிக்க வரலாற்றை அழிக்க துடிப்பதா?: போராட்டக்காரர்கள் மீது டிரம்ப் பாய்ச்சல்!

வாஷிங்டன்: ''இனவெறிக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில், வன்முறையை கட்டவிழ்த்து விட்டு, சிலர் அமெரிக்காவின் வரலாற்றை அழிக்க துடிக்கின்றனர்,'' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசினார்.\


அமெரிக்காவில், சமீபத்தில் கறுப்பினத்தைச் சேர்ந்தவர், போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டார். இதற்கு நாடு முழுதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடந்தன. இதில் வன்முறையும் அரங்கேறியது.பெரும் அச்சுறுத்தல்.

இந்நிலையில், அமெரிக்காவின் சுதந்திர தினத்தையொட்டி, தேசிய நினைவிடம் அமைந்துள்ள மவுன்ட் ரஷ்மோரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அதிபர் டொனால்டு டிரம்ப் பேசியதாவது:சமீபகாலமாக அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்கள் கவலை அளிக்கின்றன. இந்த போராட்டங்களில், வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. அமெரிக்காவை நிறுவிய தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்படுகின்றன. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவிடங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.இந்தப் போராட்டங்கள், அமெரிக்காவின் அரசியல் நடைமுறையின் அடித்தளத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன.

இடதுசாரி கலாசார புரட்சி என்ற பெயரில், அமெரிக்காவின் கலாசாரத்தை அழிக்க முயற்சிக்கின்றனர்.பள்ளிகளில், நம் குழந்தைகளுக்கு நம் கலாசாரத்துக்கு எதிரான விஷயங்களை கற்றுக் கொடுக்கின்றனர்.நாட்டின் பல நகரங்களில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக வன்முறைகளை நிகழ்த்துகின்றனர்.நம் நாட்டை நிறுவிய, வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றிய தலைவர்களை கவுரவிக்கும் விதமாக, அவர்களது சிலைகளுடன் கூடிய திறந்தவெளி பூங்கா விரைவில் அமைக்கப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.

இதற்கிடையே, டொனால்டு டிரம்பின் மூத்த மகன் டிரம்ப் ஜூனியரின் தோழியும், டிரம்ப் தேர்தல் பிரசாரத்துக்கு முக்கிய பொறுப்பேற்றிருந்த வருமான கிம்பெர்லி க்யில் போயலுக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர், தனிமைப் படுத்தப்பட்டுள்ளார். டிரம்பின் மகனுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.


'அமெரிக்காவில் கொரோனா வேகமாக பரவி வருவதை அடுத்து, பொது இடங்களில் அதிக அளவில் கூட வேண்டாம்' என, சுகாதார நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். ஆனால், அதிபர் டிரம்ப், அதை பொருட்படுத்தவில்லை.'சல்யூட் அமெரிக்கா' என்ற பெயரில், அவர் பிரமாண்ட கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தார். வாஷிங்டன் உள்ளிட்ட பல நகரங்களில் நடந்த இந்த கொண்டாட்டங்களில், முக கவசம் அணியாமல், ஏராளமானோர் பங்கேற்றனர்.

மூலக்கதை