பவுண்டரி வேலைக்கு ஆள் பற்றாக்குறை: பிற மாவட்ட தொழிலாளருக்கு வாய்ப்பு : அரசின் அனுமதி கோருகிறது 'சீமா'

தினமலர்  தினமலர்
பவுண்டரி வேலைக்கு ஆள் பற்றாக்குறை: பிற மாவட்ட தொழிலாளருக்கு வாய்ப்பு : அரசின் அனுமதி கோருகிறது சீமா

கோவை:'வெளிமாநில தொழிலாளர்கள், சொந்த ஊர் சென்று விட்டதால், பிற மாவட்ட தொழிலாளர்களை உரிய மருத்துவ பரிசோதனை, தனிமைப்படுத்துதலுடன் கோவையில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும்' என, தென்னிந்திய இன்ஜினியரிங் உற்பத்தியாளர்கள் சங்கம் (சீமா) அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கோவையில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள், பீஹார், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்து வேலை செய்தனர். வெளிமாநில தொழிலாளர்களில் பலர், கோவையில் உள்ள இரும்பு உருக்காலைகளில் (பவுண்டரி) வேலை பார்த்தனர். இந்த தொழிலாளர்கள், தற்போது சொந்த ஊருக்கு சென்று விட்டதால், கோவையில் உள்ள பவுண்டரிகளில் வேலை செய்ய ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நுாற்றுக்கும் மேற்பட்ட பவுண்டரிகளில் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், பம்ப் தொழிலில் முன்னணியில் உள்ள கோவை திணறி வருகிறது.
பம்ப் தயாரிப்பு பாதிப்பு
இந்தியாவில் ஆண்டுக்கு, 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புமிக்க பம்ப் செட்டுகள், ஒவ்வொரு ஆண்டும் விற்பனையாகி வருகின்றன. இவற்றில், 50 சதவீதத்துக்கு மேல், கோவையில் தயாராகி வருகின்றன. பவுண்டரிகளில் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டதால், பம்ப் உற்பத்தியும் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது; 40 சதவீதம் அளவு வீழ்ச்சி கண்டுள்ளது.
விவசாயம், வீட்டு உபயோக பம்ப்களின் தேவை இருந்தும், உற்பத்தி செய்ய முடியாத நிலையில், கோவை பம்ப் நிறுவனங்கள் உள்ளன. வார்ப்படங்கள் தயார் செய்ய முடியாத நிலையில், இந்த தேவை பூர்த்தியாகவில்லை.பவுண்டரிகளில் வேலை பார்க்க, பல்வேறு மாவட்டங்களில் இருந்து, ஆட்கள் வர தயாராக இருந்தாலும், பாஸ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதல், கண்காணிப்பு உள்ளிட்ட அனைத்து மருத்துவ பரிசோதனைக்கு பின், தொழிலாளர்களை அனுமதிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தபட்சம், ஒரே மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்ட தொழிலாளர்களை அனுமதிக்க வேண்டும் என, 'சீமா' கோரிக்கை விடுத்துள்ளது.காணொலி வழியாக நடந்த செயற்குழு கூட்டத்தில், 'சீமா' தலைவர் கிருஷ்ணக்குமார், துணைத்தலைவர் கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்று, இது குறித்து, அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

மூலக்கதை